மருத்துவ பீடத்துக்கு தெரிவான திருமலை முஸாதிக்காவுக்கு புது வீடு

திருகோணமலை மாவட்டத்தில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று மருத்துவத்துவ பீடத்துக்கு தெரிவான மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிக்காவின் வீட்டுக்கு சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய சனிக்கிழமை (18) விஜயம் செய்தார். இவரோடு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்,மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் ஆகியோரும் வருகை தந்தனர்.

இதன்போது ஓலையால் வேயப்பட்ட முஸாதிக்காவின் வீட்டை அமைச்சர் பார்வையிட்டதுடன் சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தினால் முஸாதிக்காவின் குடும்பத்தாருக்கு அமைத்துக் கொடுக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கல்லையும் அன்றைய தினம் நட்டி வைத்தார்.

இதன் பின் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், வறுமை கல்விக்கு தடையல்ல என்பதை சாதித்து காட்டிய மூதூரைச் சேர்ந்த முஸாதிக்கா பற்றி ஊடகங்கள் மூலம் பார்க்கக் கிடைத்தமையையிட்டு சந்தோசமடைகிறேன்.

அதனடிப்படையில்தான் இங்கு வந்தேன். உண்மையில் இம் மாணவி ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக் காட்டாக உள்ளதாகவும் இவரது கல்வி நடவடிக்கைகளுக்கு அமைச்சின் மூலமாகவும், அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் மூலமாகவும் தங்களாலான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இதன்போது தெரிவித்தார்.

தோப்பூர் குறூப் நிருபர்

 

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை