அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாமைக்கு நாம் பொறுப்பல்ல

பைசர் முஸ்தபா தெரிவானபோதும் அவர் ஏற்க முன்வரவில்லை

அடுத்த தேர்தலிலாவது முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டும்

 அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய முஸ்லிம் அமைச்சர்கள் இடம்பெறவில்லையே என்ற குற்றச்சாட்டிற்கு நாம் பொறுப்பாளிகளல்ல. எமது கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் இல்லாத காரணத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவை தெரிவு செய்து அவருக்கு அமைச்சு பதவி வழங்க முன்வந்த போதும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே எமது அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வேண்டுமேயானால் முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களது தலைமைகள் எதிர்வரும் தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக பிரதானிகள் உடனான சந்திப்பின் போது அரசில் முஸ்லிம் அமைச்சர் எவரும் இல்லாதது குறித்து கேள்வியெழுப்பியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

''கடந்தமுறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடிவு செய்து பெயர்களை அனுப்புமாறு நாம் கேட்டோம். ஆனால் அவர்கள் பெயர்களை அனுப்பவில்லை. ஆனாலும் பைசர் முஸ்தபாவுக்கு அமைச்சுப் பொறுப்பை ஏற்க கோரினோம். அவர் மறுத்துவிட்டார். எனவே அடுத்த தேர்தலில் முஸ்லிம் மக்கள் அதனை சரிசெய்யவேண்டும்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உங்களின் நிலைப்பாடென்ன என்று கேட்டபோது, தாம் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் ஆனால் பல தசாப்த காலமாக தமிழர்களை அவர்களது அரசியல் தலைவர்கள் ஏமாற்றியதுபோன்று ஏமாற்ற தாம் தயாராக இல்லையென்று குறிப்பிட்டார்.

ஜெனிவாவின் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, தமது நட்பு நாடுகளுடன் இணைந்துஅதனை எதிர்கொள்ளவுள்ளதாக பிரதமர் கூறினார்,

இலங்கையில் தேர்தலொன்று வரவுள்ள சூழ்நிலையில் எவ்வாறாயினும் மார்ச்சில் இடம்பெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இல்லையெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை