பேதங்களை விதைப்பதற்குப் பதிலாக தேசத்தை கட்டியெழுப்ப முன்வாருங்கள்

சிம்மாசன உரையில் சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசியலமைப்பில் மாற்றம்

இலங்கையரை சர்வதேசம் ஏற்றுக்ெகாள்ளும் கௌரவமான பிரஜையாக்குவதே இலக்கு

நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காக அரசியலமைப்பின் சில மாற்றங்களைச் செய்யவே வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேர்தல் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர் தெளிவான தீர்மானங்களை எடுக்க முடியாத அடிப்படைவாதத்தின் அழுத்தங்களுக்கு தொடர்ந்து கீழ்படியும் நிலையற்ற பாராளுமன்றம் நாட்டிற்கு உகந்ததல்ல என்றும் குறிப்பிட்டார்.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை மக்கள் நிராகரித்துள்ளதோடு அரசர்களை உருவாக்கும் வகிபாகத்தை மேற்கொண்டு நாட்டின் அரசியலை வழிநடத்துவதற்கு எவருக்கும் சந்தர்ப்பமளிக்கப்படமாட்டாது என்பதை ஜனாதிபதித் தேர்தல் மூலம் பெரும்பான்மை மக்கள் நிரூபித்துள்ளனர்.

குறுகிய அரசியல் நோக்கத்தில் முன்னெடுத்த அரசியலைத் தற்போதாவது கைவிட்டு மக்களிடையே பேதங்களை விதைப்பதற்குப் பதிலாக ஒன்றிணைந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஒன்றுசேர சகல தரப்பினரும் முன்வர வேண்டும் எனவும் கூறினார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதியினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வைபவ ரீதியான நிகழ்வுகளை தொடர்ந்து சபாநாயகருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்திலிருந்து அரசின் கொள்கை பிரகடனத்தை வெளியிட்ட அவர் சுமார் 35 நிமிடங்கள் உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை எவ்வகையிலும் மீறாது சுபீட்சமானதொரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு நானும் எனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை நாம் என்றும் மதிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க முடியும். எனது பதவிக் காலத்தினுள் நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதோடு எந்தவொரு பிரஜையும் தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பேன்.

தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாள உலகச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட நாடாக உருவாக்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

எதிர்வரும் மாதத்தில் இந்நாட்டின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்ததொரு நாடாக இலங்கையை உருவாக்குவதே எமது இலக்காகும்.

19 தடவைகள் திருத்தப்பட்ட எமது அரசியலமைப்பில் உள்ள உறுதியற்ற தன்மையினால் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது.

விகிதாசார வாக்கெடுப்பு முறையிலுள்ள சாதகமானவற்றை பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை பாராளுமன்றத்தின் ஸ்திரத்தன்மையையும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்காக தற்கால தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவைப்படுகிறது.

தெளிவான தீர்மானங்களை எடுக்க முடியாத அடிப்படை வாதத்தின் அழுத்தங்களுக்கு தொடர்ந்து கீழ்படியும் நிலையற்றதொரு பாராளுமன்றம் நாட்டிற்கு உகந்ததல்ல. மக்களின் இறையாண்மையை உறுதி செய்கின்ற வலுவான சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் சுயாதீன நீதித்துறை என்பற்றை அரசியலமைப்பு மாற்றத்தினூடாக மேற்கொள்ள வேண்டும்.

நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையொன்றைப் பின்பற்றுவதுடன் அனைத்து நாடுகளோடும் நட்புறவுகளைப் பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனாலும் ஒருபோதும் நாம் எமது சுயாதீனத் தன்மையைக் காட்டிக் கொடுக்க முடியாது.

இராஜதந்திர உறவுகளின் போதும் சர்வதேச வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போதும் எந்தவொரு வெளிநாட்டின் முன்னிலையிலும் மண்டியிடாத நாட்டின் இறைமையை எப்போதும் பாதுகாக்கின்ற, கௌரவமான ஆட்சியை உருவாக்குவோம்.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பௌதீக வளங்களை ஒருபோதும் வேறொரு நாட்டிற்கு வழங்குவதில்லை என்பதே எமது கொள்கையாகும்.

இலங்கையரை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படும் கௌரவமான இனமாக உயர்த்துவதே எனது அபிலாஷையாகும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 

Sat, 01/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை