புலம்பெயர் தமிழர் தாயகம் திரும்ப வேண்டும்

இந்தியா உட்பட ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டுமென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு, வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் விழா ஆகியவை வேலூர் ஊரீசு கல்லூரியில் நடைபெற்றது. இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும். அவ்வாறு இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புபவர்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவுக்கு வந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு, இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.

யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து 10 இலட்சம் தமிழர்கள் வெளியேறி விட்டனர். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் தமிழர்களுக்கு உரிய வழமான வாழ்க்கைச் சூழ்நிலையை ஏற்படுத்திட பலமாக அமையும். இலங்கையிலிருந்து வெளியேறிய தமிழர்களின் 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளன.

அங்கு இன்னும் இராணுவ முகாம்கள்தான் உள்ளன.

அந்த நிலங்களை தமிழர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

 

 

Sat, 01/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை