நீதியை நிலைநாட்ட கனடா பிரதமர் உறுதி

ஈரான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி அளித்துள்ளார். கடந்த வாரம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உக்ரைன் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் கனடா நாட்டைச் சேர்ந்த 57 பேர் உட்பட 176 பயணிகள் உயிரிழந்தனர்.

இதற்கு ஈரான் இராணுவம் பொறுப்பேற்றுள்ள நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த பேரிழப்பு நிகழ்ந்திருக்கக் கூடாது என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்த கனடா நாட்டினரின் குடும்பத்துக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

“நீங்கள் ஆற்றொணாத் துயரத்தில் தனித்து நிற்பதாக எண்ணலாம். ஆனால், நீங்கள் தனியாக விடப்படவில்லை, இந்த நாடே இன்றல்ல, நாளையல்ல, இனி வரும் காலங்களிலும் உங்களுக்கு துணையாக நிற்கும்” என்று எட்மண்டன் நகரிலுள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கூடியிருந்த சுமார் 2,300 பேரிடம் தமது துயரத்தை அவர் வெளிப்படுத்தினார்.

Tue, 01/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை