கட்சி அதிகாரத்தை பலவந்தமாக பிடித்து வைத்திருக்கிறார் ரணில்

' புதிய கூட்டணிதான் சிக்கலுக்குத் தீர்வு'

'புதிய கூட்டணிதான் ஐ.தே.கவின்

இன்றைய சிக்கலுக்கு ஒரே தீர்வு'

என்கிறார் -ஹரின் பெர்னாண்டோ.

கேள்வி: கடந்த வியாழக்கிழமை கூட்டத்தில் என்ன நடந்தது?

பதில்: அன்றைய கூட்டத்தில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அவ்வாறு பேசப்பட்ட விடயங்களில் கட்சித் தலைவர் பற்றிய விடயமும் ஒன்றாகும். கட்சியின் புதிய தலைவர் 2024இல் தெரிவு செய்யப்படுவார். எனவே அது பற்றி இப்போது பேச வேண்டியதில்லை என்று கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

அதனையடுத்து அனைவரும் எழுந்து தமது கருத்துகளை முன்வைத்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில்ஆறு தலைவர்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் அசோக அபேசிங்க கூறினார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி 30 ஆண்டுகள் அரசாங்கத்தை நடத்தியுள்ளது. அதில் 25 வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இருந்த காலமாகும். அவரது காலத்தில் ஆறு வருடங்கள் மட்டுமே கட்சி ஆட்சியில் இருந்திருக்கிறது.

அதில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிப் பதவியில் இருக்கவில்லை என்று அவர் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினர். அதனையடுத்து புதிய தலைவர் ஒருவருக்கு ரணில் விக்கிரமசிங்க வாய்ப்பளித்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று பல அங்கத்தவர்கள் குரல் எழுப்பினர். கட்சி புதிய பாதையில் செய்தும் அவசியம் இருப்பதாகவும், அதனால் அவர் கௌரவமாக விலகி புதிய தலைவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக் கொண்டோம்.

இன்னும் இரண்டு மாதங்களில் முக்கியமான தேர்தல் வரப் போகிறது. எனவே கட்சியன் செயற்பாடுகள் துரிதமாக இடம்பெற வேண்டும் என்பதை நாம் சுட்டிக்காட்டினோம்.

சரத் பொன்சேகா, அஜித் பி. பெரேரா, கபீர் ஹாசிம், சுஜீவ சேனசிங்க, நளின் பண்டார மற்றும் நான் உட்பட வேறு சிலர் அக்கூட்டத்தில் பேசினோம். பதவியில் இருந்து கீழே இறங்கும் எண்ணம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லாததால் அது பற்றி வாக்கெடுப்பு நடத்தும் யோசனையை நான் முன்வைத்த போது ரணில் விக்கிரமசிங்க அதற்கு இடமளிக்கவில்லை. எமது முயற்சிகள் அவரை கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றுவது அல்ல.

கட்சிக்குள் ஜனநாயகம் வேண்டும் என்பதேயாகும். சஜித் பிரேமதாச ஒரு மக்கள் தலைவராக உருவாகியுள்ளார். அதனை அவர் மக்களிடையே கொண்டு சென்று பரீட்சித்துப் பார்க்க ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரது தோல்வி ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலின் எதிரொலி மற்றும் எம். சி.சி. ஒப்பந்தம் தொடர்பான பௌத்த மக்களின் கடைசி நேர எதிர்ப்பு ஆகியன காரணமாகவே ஏற்பட்டது.

எனினும் 42 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தார். அவ்வாறான தோல்வி வெற்றியின் ஒருபடி என்றே கருத வேண்டும். இப்போது நாம் மீண்டும் ஒன்றுகூடி எம்மை பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எமக்கு நான்கு தெரிவுகள் இருந்தன. எனினும் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய தினம் கூட்டத்துக்கு வருகை தராததால் அன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது முறையாக இருக்காது என்று கூறி ரணில் விக்கிரமசிங்க வாக்கெடுப்பு நடத்த அவகாசம் தரவில்லை. அப்போது ஹர்ஸ டி சில்வா எழுந்து கருத்துக் கூறுகையில் ஐ.தே.கட்சி உறுப்பினர்களில் இருவர் இப்போது சிறையில் உள்ளனர் என்றார். அன்றைய தினம் சுமார் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் வாக்ெகடுப்புக்கு ஹர்ஸ டி சில்வா சம்மதம் கூறவில்லை. அந்தச் சமயத்தில்தான் ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார். அதன்பின் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ரவி கருணாநாயக்கவும் அப்போது அங்கு இருந்தார்.

அப்போது அங்கு இருந்த உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தினோம். கட்சியின் தலைவராக சஜித் இருக்க வேண்டுமென 52 பேர் வாக்களித்தனர். இந்நிலையில் கட்சி சமரசத்துக்கு வர விரும்பாவிட்டால் புதிய கூட்டணியொன்றை நாம் அமைக்கவிருக்கிறோம். கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நாம் கூட்டமொன்றை நடத்தினோம்.

அக்கூட்டத்தின் போது புதிய ஜனநாயக முன்னணியின் பங்காளிக்கட்களின் தலைவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறினர்.

 

கேள்வி: ஒரு ஐக்கிய முன்னணியாக ஏன் தேர்தலில் ஒன்றுபட்டு நீங்கள் போட்டியிட முடியாது? கடந்த நவம்பரில் இருந்த ஐக்கியம் இப்போது உங்களிடம் இல்லையே!

பதில்: அடிப்படை மட்ட கட்சி பொறிமுறை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் செயற்பட விரும்பவில்லை.

நாம் அவரை கட்சியின் போஷகராக இருக்கச் சொல்கிறோம். கட்சியின் அதிகாரத்தை பலவந்தமாக பிடித்துக் கொண்டிருக்காமல் அவர் கட்சியின் போஷகராக மாறலாமே! இப்போது நாட்டில் மரக்கறி விலைகள் பெருமளவு அதிகரித்து அரசாங்கம் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரஞ்சனின் ஒலிநாடாக்கள் விடயத்தைப் பெரிதுபடுத்தி மக்களை ஏமாற்றி வருகிறது.

இந்த நிலையில் பொதுத்தேர்தலில் தீவிரமாக செயற்பட்டால் எமக்கு வெற்றி வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன.

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை