இலங்கையர்களை சர்வதேசம் ஏற்றுக்ெகாள்ளும் கௌரவமான இனமாக்குவதே எனது அபிலாஷை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாராளுமன்றில் சிம்மாசன உரை

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தைச் சபையில் முன்வைத்து ஆற்றிய உரை.நான் சுமார் இருபது ஆண்டுகளாக இந்நாட்டின் இராணுவ அதிகாரியொருவராகவும், பத்து வருடங்களுக்கு அண்மித்த காலம் இந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும் சேவையாற்றியுள்ளேன்.

நான் முனைப்பான அரசியலில் ஈடுபட்டிராவிடினும் மக்கள் சேவை யாதென்பது பற்றி நான் சிறிய வயதிலிருந்து கற்றுக் கொண்டுள்ளேன்.

எனது தந்தையின் மூத்த சகோதரரான டி.எம். ராஜபக்ஷ, 1936 ஆம் ஆண்டில் அரசப் பேரவையில் அம்பாந்தோட்டை தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்ததுடன், 1945 ஆம் ஆண்டில் அவர் காலமான பின்னர் அம்பாந்தோட்டை மக்கள் எனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவை அரச பேரவைக்காகத் தெரிவு செய்தனர். அதன்பின் அவர் மக்களின் வாக்குகளினால் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

அன்று தொடக்கம் இற்றைவரைக்கும் றுகுணை கிருவாபத்துவையின் கிராமப்புறமான மெதமுலனயை அடிப்படையாகக் கொண்ட மூன்று தலைமுறையைச் சேர்ந்த ராஜபக்ஷவினர், வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாகச் சேவையாற்றியுள்ளனர். இக்காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதி சபாநாயகர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமராக மட்டுமல்லாது ஜனாதிபதிகள் இருவராகவும் எங்கள்மீது நம்பிக்கை வைத்து இந்நாட்டின் பொதுமக்கள் எம்மை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அன்று உறுகுணையின் சிங்கமாக அழைக்கப்பட்ட டி.எம்.ராஜபக்ஷ, பாராளுமன்றத்திற்கு வருகைதந்த முதல் நாளிலிருந்தே குரக்கன் நிறமான சால்வையொன்றை அணிந்திருந்தார்.

அவர் கிருவாபத்துவையின் குரக்கன் செய்கைபண்ணும் விவசாயிகளையே அந்தச் சால்வையின் மூலம் அடையாளப்படுத்தினார்.

டி.எம்.ராஜபக்ஷவின் பின்னர் எனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவும் அவரின் பின்னர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் இந்தக் குரக்கன் நிறமான சால்வையை அணிந்திருந்தனர்.

நான் அந்தச் சால்வையை அணியாதிருப்பினும் இந்நாட்டின் சமானிய மக்கள் சார்பில் என்றென்றும் தம்மை அர்ப்பணித்த குரக்கன் சால்வையினால் அடையாளப்படுத்துகின்ற அந்த ஆழமான தத்துவத்தையே நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன்.

அந்தத் தத்துவம் ஜனாதிபதி தேர்தலுக்காக நான் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்திலும் உள்ளடங்கியிருக்கிறது.

இவ்வேளையில் நான் 'சுபீட்சத்தின் நோக்கு' எனும் கொள்கைப் பிரகடனத்தை சபையில் சமர்ப்பிக்கிறேன்.

2019 நவம்பர் மாதம் 16 ஆந் திகதி நடைபெற்ற தேர்தலில் இந்நாட்டு மக்கள் எனக்கு மிகத் தெளிவானதொரு மக்கள் ஆணையை பெற்றுக் கொடுத்தனர். என்மேல் வைத்த மிகுந்த நம்பிக்கையைக் கொண்டே அந்த ஆணையை எனக்கு வழங்கினர். அந் நம்பிக்கையை எவ்வகையிலும் மீறாது நாம் உறுதியளித்த அதேவாறு மக்களுக்காகச் சுபீட்சமானதொரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு நானும் எனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

எனக்கு வாக்களித்த மக்களுக்கு இந்நாட்டு அரசியல் கலாசாரத்தில் பாரியதொரு மாற்றத்தைச் செய்யவே தேவையேற்பட்டிருந்தது. குறிப்பாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல்ரீதியான நிகழ்ச்சி நிரலை மக்கள் நிராகரித்தனர். மேலும் அரசர்களை உருவாக்கும் வகிபாகத்தை நடித்துக் கொண்டு நாட்டின் அரசியலை வழிநடத்துவதற்கு எவருக்கும் சந்தர்ப்பமளிக்கப்படமாட்டாது என்பதை பெரும்பான்மை மக்கள் நிரூபித்தனர்.இந்த யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நான் அழைப்புவிடுக்கின்றேன். கடந்த காலத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு நடத்திய அரசியலைத் தற்போதாவது கைவிட்டு, மக்களிடையே பேதங்களை விதைப்பதற்குப் பதிலாக ஒன்றிணைந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஒன்றுசேருமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.

பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் என்றும் மதிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க முடியும்.

எமது நாட்டின் உன்னதமான அரசியல் யாப்பின்படி எனது பதவிக்காலத்தினுள் நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் என்றும் புத்தசாசனத்தைப் பாதுகாத்து போஷிப்பேன் என்றும் அதேபோன்று எந்தவொரு பிரஜையும் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை எப்போதும் காப்பேன் என்றும் இதன்போது வெளிப்படுத்த விரும்புகின்றேன்.

இந்தப் பாராளுமன்றம் மீண்டுமொருமுறை மக்களின் உண்மையான பிரச்சினைகளை கலந்துரையாடும், தேசியக் கொள்கைகளை விவாதிக்கும் சட்டவாக்கத்துறையின் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றும் முன்மாதிரியானதோர் இடமாக மாற்றப்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதி ஒருவரின் அடிப்படைப் பொறுப்பாவது மக்களுக்குச் சேவையாற்றுவதேயாகும். எமக்குக் கிடைத்துள்ள பதவிகள் சிறப்புரிமைகள் அல்ல. அவை பொறுப்புக்கள் என்பதை நாம் அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டின் மக்களுக்கு அறிமுகப்படுத்திய 'சுபீட்சத்தின் நோக்கு' எனும் கொள்கைக் பிரகடனமானது சுமார் 4 வருடங்களுக்குக் கிட்டிய காலமாக ‘வியத் மக’ (சான்றோர் வழி) போன்ற தேசிய அமைப்புக்களூடாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கம சமக பிலிசந்தரக்' (கிராமத்துடனான உரையாடல்) நிகழ்ச்சித்திட்டத்தினூடாகவும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் நிகழ்த்திய விவாதங்களூடாகவும் மக்களது கருத்துக்களைப் பெற்றுக்கொண்டும் எனது நோக்கையும் அதில் சேர்த்துக் கொண்டும் தயாரித்த தேசிய வேலைத்திட்டமாகும்.

அத்திட்டத்திற்கமைய மக்களுக்குச் சுமையாகவிருந்த வரிச்சுமையை தளர்த்தல், வெளிப்படைத் தன்மை மற்றும் வினைத்திறமையுடன் கூடிய உயர்ந்த நிர்வாகத் திறமுறையை ஆரம்பித்தல், வீணான அரசாங்கச் செலவுகளைத் தவிர்த்துக் கொள்ளல் போன்ற பல நடவடிக்கைகளைத் தற்போது நாங்கள் எடுத்துள்ளோம்.

எமது கொள்கைகளினிடையே தேசியப் பாதுகாப்புக்காக உச்சக் கட்ட முன்னுரிமை கிடைக்கின்றது.

தேசியப் பாதுகாப்புப் பொறிமுறையை மீண்டும் வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். திறமை வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் பொறுப்புக்களை கையளித்துள்ளோம். தேசியப் பாதுகாப்புக்கான பொறுப்புடைய முப்படைக்கும், பொலிசாருக்குமிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். தேசிய உளவுப் பிரிவு வலையமைப்பை மறுசீரமைத்து வலுப்படுத்தியுள்ளோம்.

எமது தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாள உலகச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும், சாதாரண மக்கள் வாழ்க்கையை முறியடிப்பவர்களிடமிருந்தும் அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்களற்ற பாதுகாப்பான நாடாக உருவாக்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

எமது அடிப்படை நோக்கமானது உற்பத்திப் பெருக்கமுள்ள ஒரு பிரஜை, மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற குடும்பம், ஒழுக்கம் மிக்க சமூகம் மற்றும் சுபீட்சமான ஒரு தேசத்தை உருவாக்குவதேயாகும்.

இந்நாட்டில் வாழுகின்ற, வேலை செய்யக்கூடிய வயதிலுள்ள ஒவ்வோர் ஆரோக்கியமான பிரஜையையும், சமூகத்திற்கு உழைக்கக் கூடிய உற்பத்திப் பெருக்கமிக்க பிரஜையாக மாற்றுவதில் அரசு முன்னின்று செயற்பட வேண்டும். அவர்கள் அனைவரையும் இந்நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்கச் செய்வதே எமக்குத் தேவையாகிறது.

அபிவிருத்திச் செயற்பாடுகளின் நன்மைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரப்படுவதில் நாங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். அதேபோன்று நாட்டு மக்களின் தேவைகள் உண்மையாகவே நிறைவேற்றப்படுகின்றனவா, அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா? என்பதை ஆராய்வதற்காக புதிய திறமுறையொன்றையும், சுட்டிகளையும் பயன்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கான மக்களின் பதிலை ஆராய்வதற்காகத் தேர்தல் வரும் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

கடந்த நாட்களில் நாங்கள் வர்த்தகத்துறைக்காக வழங்கிய வரிச்சலுகைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை அவர்கள் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கமைய வரிகள் குறைக்கப்பட்ட ஒவ்வொரு பண்டத்தினதும், ஒவ்வொரு சேவையினதும் குறிப்பிட்ட விலை குறைக்கப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

வறுமையை ஒழிப்பது எமது அரசாங்கத்தின் முன்னுரிமையாகக் கருதுகின்றோம். அதற்காக நாங்கள் மக்கள் ஏழைகளாவதற்கான காரணங்களைப் புரிந்து கொண்டு அவற்றிற்குத் தீர்வுகளை வழங்க வேண்டும். தகுந்த கல்வியோ அல்லது திறமையோ இல்லாமை, பயிரிடுவதற்குக் காணிகள் இல்லாமை, சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு மூலதனம் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கும் நடைமுறை சாத்தியமான அணுகுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம்.

எதிர்வரும் மாதத்தில் இந்நாட்டின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு நாம் திட்டம் வகுத்துள்ளோம். அரச துறையையும், தனியார் துறையையும் ஒன்றிணைத்துக்கொண்டு தொழிலின்மைக்காகப் நடைமுறை சாத்தியமான தீர்வுகளை முன்வைப்பதற்கு எமது அரசாங்கம் தயாராகவுள்ளது.

குணநலமிக்க, சட்டத்தை மதிக்கும், ஒழுக்கப் பண்பாடுடைய சமூகத்தை உருவாக்குவோம் என்பது கடந்த தேர்தலின்போது எமது தொனிப்பொருளாக இருந்தது. மக்கள் அதற்காக எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.

எமது நாடு மிகவும் பண்டையகால வரலாற்றுமிகுந்த பௌத்த தத்துவத்தைப் போன்று உலகினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல மத போதனைகளினால் போஷிக்கப்பட்ட சமூகம் வாழும் நாடாகும். எமது விழுமியங்களையும், கலாசாரங்களையும் நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.

இலங்கையை அபிவிருத்தியடைந்ததொரு நாடாக உருவாக்குவது எமது இலக்காகும். அது இறைமையான, சுதந்திர நாடாதல் வேண்டும். அதேபோன்று அது பாதுகாப்புமிக்க அமைதியான நாடாதல் வேண்டும். இவ்வனைத்துப் பிரிவுகளும் நிறைவுபெறுமிடத்தே இலங்கை உண்மையிலேயே சுபீட்சமானதொரு நாடாகும்.

'சுபீட்சத்தின் நோக்கு' என்பதன் வாயிலாக நாங்கள் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையினையே அறிமுகப்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு பிரஜைக்குமாக ஏற்றுக் கொள்ளத்தக்க மட்டத்திலான பொருளாதார நிலைப்பாட்டை உறுதிப்படுத்துதல், முன்னேறுவதற்கு முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் சமவாய்ப்புக்களை வழங்குதல், மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட தூய்மையான அத்துடன் வினைத்திறன்மிக்க அரச சேவையை உறுதிப்படுத்தல் மற்றும் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களைப் பாதுகாத்து அவர்களை வலுவூட்டுதல் அதன் முக்கிய நோக்கமாகும்.

ஊழல்கள் மற்றும் மோசடிகளைப் புறக்கணிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நாங்கள் செயற்படுத்த வேண்டியுள்ளது. ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நாங்கள் அந்தஸ்த்தைக் கருதாது சட்டத்தை விரைவில் செயற்படுத்தவுள்ளோம்.

இன்று அநேகமான நாடுகள் அரச துறையின் வினைத்திறமையை உயர்த்துவதற்காகத் தொழில்நுட்பத்தை தீர்வொன்றாகப் பயன்படுத்தியுள்ளனர். அதனூடாக அனைவருக்கும் சமவாய்ப்புக்களை வழங்க முடியும். அதனால், அரச நிறுவனங்களில் தொழில்நுட்பப் பயன்பாட்டைப் பரவலாக்குவதன்பால் நாங்கள் விசேட கவனத்தைச் செலுத்துகின்றோம்.

2005 – 2014 இடைப்பட்ட காலத்தில் மஹந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இலங்கையை தென் ஆசியாவின் பொருளாதார மையமாக முன்னேற்றுவதற்கு திட்டம் வகுத்தது.

மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகமானது தென் மாகாணத்தின் மாபெரும் தொழில்நுட்ப நகரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே தெரிவு செய்யப்பட்டது.

இலங்கையை ஆசியாவில் நிதிசார் மற்றும் வர்த்தக மையமாக உருவாக்குவதற்காகவே கொழும்பு துறைமுக நகரத்தை கட்டியெழுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. நீண்டகால நோக்கங்களுடன் திட்டமிடப்பட்ட அக்கருத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

நாங்கள் செம்மையான ஒரு திட்டத்தின்படி செயற்பட்டால் பிராந்திய அயல் நாடுகளுக்குப் பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற பல்வேறு சர்வதேச வியாபாரங்களை இலங்கையில் நிலைப்படுத்திக்கொள்ள முடியும். அதற்காக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் அம்முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் தேவையான சகல வசதிகளையும் துரிதமாக வழங்குவதற்காகவும் நாங்கள் தயாராகவிருத்தல் வேண்டும்.

அதிவேகப் பாதைத் தொகுதிகளைப்போன்று நெடுஞ்சாலைத் தொகுதிகளை முன்னேற்றும் பணிகளைத் துரிதப்படுத்தி நாட்டின் எந்தவோர் இடத்திலிருந்தும் இன்னுமோர் இடத்திற்குச் சில மணித்தியாலயங்களினுள் பயணிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துதல் பொருளாதார அபிவிருத்திக்கு மிக முக்கியமானது. புகையிரதச் சேவையை மேம்படுத்துதலும் இவ்வேலைத்திட்டத்தின் அவசியமானதொரு பிரிவாகும். வினைத்திறன்மிக்க அத்துடன் சொகுசு முறையிலான புகையிரதச் சேவையின் மூலம் இன்று பாரியதொரு பிரச்சினையாக நிலவுகின்ற வீதி நெருக்கடிக்கான தீர்வுகளைக் காண முடியும்.

நகரமயமாக்கல் ஒரு நாட்டிற்கு நன்மையைப்போன்று தீமையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அபிவிருத்தி நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக எமக்கு மீள் நகரமய வேலைத்திட்டமொன்று தேவைப்படுகிறது.

இதனூடாக நகரப்புற நெருக்கடியைக் குறைப்பதற்கும், சூழல் மாசடைவதைக் குறைப்பதற்கும், அதேபோன்று வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதற்கும் எமக்கு வசதி கிடைக்கிறது. இலங்கை முழுவதும் பரந்திருக்கும் மக்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகள், சுகாதாரச் சேவைகள் மற்றும் தொழில்கள் என்பவற்றை நடாத்திச் செல்வதற்காக தமது பிரதேசத்தினுள் வேண்டிய வசதிகள் இருக்க வேண்டும். வீதிகள் மற்றும் புகையிரதப் பாதைத் தொகுதிகளின் முன்னேற்றத்தைப்போன்று நாடு முழுவதிலும் அதிவேக சர்வதேச வலையமைப்பு வசதிகள் மற்றும் தொடர்பாடல் வசதிகள் என்பவற்றை இதற்காக வழங்குதல் முக்கியமாகிறது.

இலங்கையில் மட்டுமன்றி ஆபிரிக்க பிராந்திய நாடுகளிலிருந்துகூட கொண்டுவரப்படும் இரத்தினக்கற்களின் பெறுமதியை அதிகரித்து விற்பனை செய்யக்கூடிய சர்வதேச ரீதியிலான இரத்தினக்கல் வர்த்தகத் தொகுதியொன்றை இலங்கையில் தாபிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடல்கள் மற்றும் புவிச்சரிதவியல் அளவைகளுக்காக புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்க வேண்டுமென்பதுடன், இலங்கையின் கனிய வளங்களுக்குப் பெறுமதி சேர்க்கும்

கைத்தொழில்களுக்கான முதலீடுகளுக்கு விசேட சலுகைகளை வழங்கி அவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

பல்வேறு சட்டதிட்டங்கள், அனுமதிப் பத்திரங்கள் என்பவற்றின்மீதான தடைகளின் மூலம் இலங்கையின் பாரம்பரிய வாழ்வாதாரங்களாகிய இரத்தினக் கல் தொழில், ஓட்டுக் கைத்தொழில், செங்கல் கைத்தொழில், தச்சு வேலை மற்றும் கைத்தொழில்கள் போன்ற துறைகளுக்காக அநாவசியமான அத்துடன் அநீதியான வரையறைகளை விதித்து நாட்டின் அபிவிருத்திக்குத் தடையேற்படுத்துவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

எதிர்காலத்தைத் திட்டமிடும்போது கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் முதலியன தொடர்பாகத் தற்போது இருப்பதைவிட முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சிறந்ததொரு காலநிலை இருக்கின்ற அத்துடன் அதிவிசாலமான கடல்சார் பொருளாதார வலயத்திற்கு உரித்துடைய நாடென்ற ரீதியில் நம்மால் இத்தொழிலை இதை விட மிகவும் முன்னேற்ற முடியும்.

பலசரக்குப் பொருட்கள், பழவகைகள், மரக்கறி வகைகள், தானியங்கள், மாமிசம் மற்றும் மீன் போன்ற ஏற்றுமதி செய்யக்கூடிய கமத்தொழில் உற்பத்திகள் பல இருக்கும்போது இதைவிட ஏற்றுமதி வருமானத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டில் வாழும் மக்களின் 1/3 பங்கினர் கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் என்பவற்றின்மீது வாழ்கின்றனர். நாங்கள் இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். எதிர்வரும் தசாப்தத்தில் இலங்கையில் கமத்தொழிலை முற்றுமுழுதாகச் சேதனப் பசளைப் பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிக்க வேண்டும். உள்ளூர் ரீதியாக சேதனப் பசளை உற்பத்தியை விருத்தி செய்யும் வேலைத்திட்டமும் இதில் உள்ளடங்குகின்றது.

கமத்தொழில் உற்பத்திகளை மீள் ஏற்றுமதி செய்வதை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு தற்போது பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கடல்சார் பொருளாதாரம் தொடர்பாகவும் இதைவிடக் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். கடற்றொழிலை முன்னேற்றுவதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், இயந்திர உபகரணங்கள் என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக முறையானதொரு வேலைத்திட்டமொன்றை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம்.

ஆழ்கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகச் சகல கடற்றொழில் துறைமுகங்களை நவீனமயப்படுத்துவதுடன், தேவைகளுக்கேற்ப புதிதாக துறைமுகங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு நன்நீர் மீன்பிடித்தொழிலை முன்னேற்றவும் நடவடிக்ைக எடுக்கப்படும்.

ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை நிறைவேற்றும் போது உலகில் முன்னணியில் திகழ்கின்ற நாடாக இலங்கையை மாற்ற வேண்டும்.

இளைஞர் யுவதிகளை வழிதவறவிடாது அவர்களுக்காக உயர்கல்விக்கும், தொழில்நுட்ப கல்விக்குமுள்ள வாய்ப்புகளை விரிவாக்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மிகக் குறுகிய காலத்தினுள் கட்டியெழுப்ப வேண்டும். அரசாங்கப் பல்கலைக்கழகங்களிலும், அரசாங்கத்தின் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிலும் உள்ள இயலளவுகளை வினைத்திறமையாக பயன்படுத்துவதன் வாயிலாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இன்று பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்ற சில பாடநெறிகள் தொழிற்சந்தைக்கு ஏற்றவாறாக அமைவதில்லை. தற்கால தொழிற்சந்தை தேவைகளுக்காக எமது பல்கலைக்கழக மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்குத் தற்போது கற்கும் பாடநெறிகளுக்கு மேலதிகமாக அவர்கள் தன்னிச்சையாக பங்குபற்றக் கூடிய குறுகிய கால மேலதிக பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

மாணவர்களை அனுமதிக்கும் போதும் அதேபோன்று சந்தை தேவைகளை இலக்கிட்டு பாடநெறிகளைத் திருத்தும் போதும் பல்கலைக்கழகங்களுக்கும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களுக்கும் கூடிய சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

நாட்டில் தற்போது உள்ள டிப்ளோமா மட்ட பாடநெறிகளை நடத்தும் நிறுவனங்களை முறையே பட்டமளிக்கும் தரத்திற்கு உயர்த்துவது அவசியமாகும்.

இதற்கான ஆரம்பமாக எமது ஆசிரியர் பயிற்சி பாடசாலைகள் மற்றும் தாதியர் பயிற்சி பாடசாலைகள் என்பவற்றைப் பட்டமளிப்பு தரத்திற்குக் கொண்டு வருவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறையானது தற்போது கல்வித்துறையினுள் பிரச்சினையாகவுள்ளது. அதேபோன்று தாதியர்களுக்காக தற்போது வழங்கப்படும் மூன்று வருடகால டிப்ளோமாவை நான்கு வருடகால பட்டப் படிப்பு வரை உயர்த்துவதன் மூலமும், அவர்களின் ஆங்கில அறிவை விருத்தி செய்வதன் மூலமும் அவர்களுக்கு சர்வதேச தர அளவுகளின் கீழ் வெளிநாடுகளிலும் கூட சேவையாற்றுவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

உயர்தரத்தில் சித்தி பெறாதவர்களும், சாதாரண தரம் வரை கற்றுக் கொண்டவர்களுமான மாணவர்களுக்குத் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரவியல் பிரிவின் அறிவை விருத்தி செய்து கொள்வதற்காக இயந்திரவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரித் தொகுதியை வலுப்படுத்த வேண்டும். இந்நிறுவனங்களுக்காக வழங்கப்படும் ஒதுக்கீடுகளையும் வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். இதனூடாக சர்வதேச ரீதியில் தொழில்பயிற்சி பெற்ற ஊழியப்படையை உருவாக்க முடியுமானதுடன், உள்நாடு போன்று வெளிநாட்டுச் தொழிற்சந்தையிலும் உயர்ந்த சம்பளத்தைப் பெறக் கூடிய தொழில் வாய்ப்புக்களை எமது இளைஞர் யுவதிகளுக்குப் பெற்றுக் கொடுக்க முடிகிறது.

தொழிற்துறையினுள் ஆங்கில அறிவு போதாமை பெருமளவிலான இளைஞர் யுவதிகளுக்கான வாய்ப்புக்களை இழக்கச் செய்கிறது. இதனால் இலங்கையின் ஒவ்வொரு பாடசாலையிலும் ஆங்கிலமொழியைக் கற்பிப்பதற்கான வசதிகளை முன்னேற்றுவதற்கும் அதற்குத் தேவையான ஆசியர்களை இணைப்புச் செய்வதற்கும் விசேட திறமுறையொன்றை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்.

இளைஞர் யுவதிகளுக்குப் புதிய தொழில் வாய்ப்புக்களைத் தேடிக் கொடுப்பதற்காக எமது வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு முக்கிய பொறுப்புக்களைக் கையளிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கல்வித்துறையானது ஒரு நாட்டிற்கு சிறந்த அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்குரிய வழியாகும். இலங்கைப் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையானோர் இன்று ஆசிய உயர்கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொண்டு இருக்கின்றனர். கல்விக்காக எமது பிள்ளைகளை அதி கூடிய பணச் செலவில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கையின்பால் கவரச் செய்யும் விதத்திலான வேலைத்திட்டத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சர்வதேச ரீதியில் தமது தரப்படுத்துகைகளிலிருந்து மேலுயர்வதற்காக குறுகிய கால அத்துடன் நீண்டகால திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட எமது நாடு முன்னேற்றமடைந்து வரும் நாடாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் உண்மையிலேயே இதிலிருந்து மீண்டு முன்னேறிய நாடாக வேண்டுமாயின்அதற்காக உள்ள வாய்ப்புக்களை கண்டறிதல் வேண்டும்.

5 பில்லியனுக்கும் கூடிய மக்கள் வாழ்கின்ற ஆசியாவினுள் இன்று மாபெரும் பொருளாதார மலர்ச்சி ஏற்பட்டு உலகப் பொருளாதாரத்தின் அதிகார மையம் ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

பணம் செலவழிக்கும் ஆற்றலுள்ள மத்திய வகுப்பின் சமுதாயம் கடுகதியாக விருத்தியடைவது இவ்வலயத்திற்குள்ளேயாகும்.

ஆகையால், எமது உள்நாட்டுத் தொழில் முயற்சியாளர்கள் ஆசிய பிராந்தியத்தினுள் புதிய சந்தைகளைத் தேடிச் செல்வதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

21 ஆவது நூற்றாண்டானது அறிவை மையமாகக் கொண்ட நூற்றாண்டாக அழைக்கப்படுகிறது.

செயற்கை புத்திக்கூர்மை (Artificial Intelligence), உயிரினத் தொழில்நுட்பம் (biotechnology), ரொபோ விஞ்ஞானம் (robotics), 3D அச்சீடு, IOT உதிரிப்பாகங்கள் (Internet of Things) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் உலகத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன.

உலகின் முன்னேற்றமடைகின்ற பல நாடுகள் இந்த யதார்த்தத்தைப் புரிந்துள்ளன. தொழில்நுட்ப மைய முதலீடுகளுக்காக அவர்கள் பெரும் பணத்தைச் செலவு செய்கின்றனர்.

எமது முதலீட்டுக் கொள்கையை முகாமை செய்யும் போது நாங்கள் இதன்பால் கூடிய கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக எமக்கு எந்த வகையான முதலீடுகள் தேவைப்படுகின்றது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கமைய நாட்டிற்குப் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்ற முதலீட்டாளர்களுக்கு விசேட வசதிகளையும், சலுகைகளையும் வழங்கி நாங்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

எமக்கான சந்தை வாய்ப்புக்கள் இருப்பது தொழில்நுட்பத்துறைகளில் மட்டுமல்ல என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருங்காலத்தில் எம்மால் இலகுவாக முன்னேற்றக் கூடிய மற்றுமொரு துறையாவது சுற்றுலாத்துறை கைத்தொழிலாகும். 2018 ஆம் ஆண்டில் 4.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வருமானத்தை ஈட்டிய சுற்றுலாத்துறைக் கைத்தொழில் இன்னும் பல ஆண்டுகளினுள் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டும் தொழிலாக மாறுவதற்கு அவகாசம் உள்ளது. இதற்காக மிக முறையானதொரு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

அரச நிறுவனங்களை இலாபகரமாக அத்துடன் வினைத்திறமையாக நிருவகிப்பதற்காக உயர் பதவிகளுக்கு தகுதிவாய்ந்தவர்களைத் தெரிவு செய்யும் போது உரிய துறையின் அறிவும் பொறுப்பை வகிப்பதற்கான தகைமையும் கொண்டுள்ளவர்களை நியமிப்பதாக நாங்கள் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டோம்.

அதற்கமைய புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின் அரச நிறுவனங்களை நிர்வகிப்பதற்காக பொருத்தமானவர்களைப் பரிந்துரைப்பதற்கு நாங்கள் குழுவொன்றைத் தாபித்துள்ளோம்.

2004 – 2014 இடைப்பட்ட காலத்தினுள் நாங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் துரிதமான அபிவிருத்தி ஏற்படும் விதத்தைக் கண்டோம். வீதித் தொகுதி, வீடமைப்பு, மின்சாரம், நீர், தொடர்பாடல் வசதிகளைப் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளிலும் கழிவுப்பொருட்கள் முகாமைத்துவம், நகர அலங்கரிப்பு போன்ற துறைகளிலும் மாபெரும் முன்னேற்றம் நிகழ்ந்தது. திறமையான நிருவாகத்தினை தாபித்தலின் மூலம் எம்மால் மீண்டும் இந்த நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஜனநாயக ரீதியிலான இராச்சியமொன்றில் வெற்றிகர நிலைமை தங்கியிருக்கும் அடிப்படையாவது அரசியலமைப்புச் சட்டமாகும். 1978 தொடக்கம் 19 தடவைகள் திருத்தப்பட்ட எமது அரசியலமைப்பிலுள்ள உறுதியற்ற மற்றும் குழப்பமான தன்மையினால் தற்காலத்தில் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன.

எமது நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, நிலைப்பாடு மற்றும் ஒற்றையாட்சியை பாதுகாப்பதாகவிருப்பின் தற்போது இருக்கின்ற அரசியலமைப்பின் சில மாற்றங்களைச் செய்யவே வேண்டும்.

விகிதாசார வாக்கெடுப்பு முறையில் உள்ள ஆக்க முறையிலான இலட்சணங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளையில், பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டையும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்காகத் தற்கால தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

இலக்கங்களினால் தேர்தல்களை வெல்லக் கூடியதாகவிருப்பினும் தெளிவான தீர்மானங்களை எடுக்க முடியாத அடிப்படை வாதத்தின் அழுத்தங்களுக்குத் தொடர்ந்து கீழ்படியும் நிலையற்றதொரு பாராளுமன்றம் ஒரு நாட்டிற்கு பொருந்தாது.

மக்களின் இறையாண்மையை உறுதி செய்கின்ற வலுவான சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் சுயாதீன நீதிமன்றம் தாபித்தலை சட்டரீதியான மாற்றத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையொன்றைப் பின்பற்றுவோம்

நாங்கள் அனைத்து நாடுகளோடும் நட்புறவுகளைப் பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஆயினும், ஒருபோதும் நாம் எமது சுயாதீனத் தன்மையைக் விட்டுக் கொடுக்க முடியாது.

இராஜதந்திர உறவுகளின் போது அல்லது சர்வதேச வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போதும் எந்தவொரு வெளிநாட்டின் முன்னிலையிலும் மண்டியிடாத நாட்டின் இறைமையை எப்போதும் பாதுகாக்கின்ற, எந்தவொரு நாடோடும் சமநிலையில் கொடுக்கல் வாங்கல் செய்யும் தேசத்தின் அபிமானத்தைப் பாதுகாக்கின்ற கௌரவமான ஆட்சியை நாம் உருவாக்குவோம்.

முக்கியமாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த எமது நிலப் பிரதேசங்கள் அல்லது பௌதீக வளங்களை ஒருபோதும் வேறொரு நாட்டிற்கு உடமையாக்காதிருத்தல் எமது கொள்கையாகும்.

இலங்கையரை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படும் கௌரவமான இனமாக்குவது எனது அபிலாஷையாகும். அந்த நோக்கத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் போது ஓர் இனம் என்ற ரீதியில் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் மூலம் எமது முன்னிலையில் உள்ள சவால்களை வெற்றி பெறவும் முடியும்.

 

Sat, 01/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை