கல்முனை அரச ஊழியர் கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

இலங்கையில் பதினைந்து இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் பல முக்கிய நகரங்களில் காணப்படுவதில்லை. எனினும் கல்முனை அரச ஊழியர் பொழுதுபோக்கு கழகம் தற்சமயம் சிறப்பாக இயங்கிவருகின்றமை பாராட்டுக்குரிய விடயமாகும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் குறிப்பட்டார்.

கல்முனை அரச ஊழியர் பொழுதுபோக்கு கழகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் சமூக சேவையாளர்களை பாராட்டும் நிகழ்வும் சனிக்கிழமை (11) கழகத்தின் தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான ஆர்.தர்மலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசனும் கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜூம் கலந்து சிறப்பித்தனர். அங்கு மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் பேசுகையில், அரச ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் போன்றோரின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் போன்றோருக்கும் இதே மாதிரியான கௌரவம் அளிக்கப்பட வேண்டும்.

இக்கழகமானது தமது அங்கத்தவர்களின் நலன்களை பாதுகாக்கும் அதேவேளை, சமூகப்பணிகளையும் முன்னெடுக்கின்றமை பாராட்டுக்குரியவிடமாகும். கல்முனை பிரதேசத்தில் உள்ள அதி கஷ்ட பிரதேச பாடசாலையாக விளங்கும் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளித்தமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

எதிர்காலத்தில் இவ்வாறான சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இக்கழகத்திற்கு பதவி வழியாக போசகராக உள்ளவன் என்ற வகையில் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

(துறைநீலாவனை நிருபர்)

Tue, 01/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை