ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் இன்று வெளியேற்றம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்வதற்கு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற உணர்வுபூர்வமான விவாதத்திற்குப் பின்னர் பிரெக்சிட் உடன்படிக்கைக்கு ஆதரவாக 621 வாக்குள் பதிவானதோடு எதிராக 49 வாக்குகளே இடம்பெற்றன. இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் இன்று உத்தியோகபூர்வமாக விலகுகிறது.

இருப்பினும், பொருளாதார ரீதியில் எந்தவொரு கொள்கையும் வகுக்கப்படாததால் பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் இந்த ஆண்டு இறுதிவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருக்கும்.

முன்னதாக, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒப்பந்தம் மீது விவாதம் நடைபெற்றபோது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டனுக்கு பல்வேறு உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதேநேரத்தில் பிரிட்டனின் எதிர்கால உறவுகள், வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆகியவை குறித்து சில உறுப்பினர்கள் எச்சரித்தனர்.

இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விடைபெறுவதற்காக, பாரம்பரிய ஸ்கொட்லாந்து பாடலான ஓல்ட் லாங் சைன் பாடப்பட்டது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான இறுதி வாக்கெடுப்பின்போதும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

ஆனால், அதற்குப் பின்னர் பிரெக்சிட் கட்சித் தலைவரான நிகல் பரஜ் பேச ஆரம்பித்தபோது, பாராளுமன்றம் சூடுபிடித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தை தாக்கிப் பேசிய அவர், பிரித்தானியாவை வம்புக்கிழுக்க முடியாது, அது ஒரு பெரிய நாடு என்ற ரீதியில் பேசத் தொடங்கினார்.

தனது உரையின்போது, எங்களுக்கு ஐரோப்பா பிடிக்கும், ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தை நாங்கள் வெறுக்கிறோம் என்றார் அவர்.

தனது உரையின் இறுதியில், நாங்கள் செல்வது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியும். எங்கள் தேசியக் கொடிகளை நீங்கள் தடை செய்ய விரும்புகிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு எங்கள் கொடிகளை அசைத்து விடைகொடுக்கப்போகிறோம் என்றார்.

பிரிட்டன் வெளியேறுவதன் மூலம், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 27ஆகக் குறைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முதல் நாடாகவும் பிரிட்டன் பதிவாகிறது.

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து ‘கண்ணியமான’ வெளியேற்றத்தை மேற்கொண்டு ஒரு புதிய அத்தியாயத்தைத் ஆரம்பிக்கும் என்று தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் வாக்கெடுப்பு இடம்பெற்று 43 மாதங்களின் பின்னர் இன்று சர்வதேச நேரப்படி 11 மணிக்கு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுகிறது.

இதனை பிரிட்டன் நாட்டிற்கு ஒரு ‘நம்பிக்கையின் தருணம்’ என்றும் பொரிஸ் தெரிவித்தார்.

இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் ஜோன்சன், தனது நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சியில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்ற பிரெக்சிட் உடன்படிக்கை எலிசபட் மகாராணியின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஐரோப்பிய ஒன்றியத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை