ஐ.தே.க தலைமையை ஏற்கிறார் கரு ஜயசூரிய

பாராளுமன்ற பெப்ரவரி அமர்வின் பின்

பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் பாராளுமன்ற அமர்வுடன் அதன் பதவிக்காலம் நிறைவடையவிருப்பதால் அதன் பின்னர் கரு ஜயசூரியவின் சபாநாயகர் பதவிக்காலமும் முடிவுக்கு வரவுள்ளது. அதனையடுத்து அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக ஐ.தே.க வட்டாரம் நேற்று தெரிவித்தது.

கட்சியின் தலைவராக கரு ஜயசூரியவின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்யவிருக்கின்றார் என்று கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வருந்த நிலையில் இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது சபாநாயகரின் செயலாளர் மேற்கண்ட தகவலை தினகரனுக்குத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் நான்கரை வருடங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதியுடன் நிறைவடைகிறது. அன்றைய தினம் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி தீர்மானித்திருக்கின்றார்.

இதற்கமைய பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் பாராளுமன்ற அமர்வே கடைசி அமர்வாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பு கரு ஜயசூரியவுக்கு வழங்கப்படவுள்ளது. அதனை அடுத்து கட்சி தேர்தலுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவிருக்கின்றது. வேட்பாளர் தெரிவுக்கான விண்ணப்பங்களை பெப்ரவரி இறுதியில் கோரவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீகொத்தா வட்டாரம் தெரிவித்தது.

இதனிடையே ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப் பொறுப்பு சஜித் பிரேமதாஸவிடம் ஒப்படைக்கப்பட்டு தேர்தலில் களமிறக்கப்படவுள்ளார். இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபைகளின் உறுப்பினர்கள், உள்ளூராட்சிச் சபைகளின் பிரதிநிதிகள், கட்சி மாவட்ட தொகுதி அமைப்பாளர்களைச் சந்தித்து தேர்தல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிலும் நாளைய தினம் விஷேட ஊடக மாநாடொன்று நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க ஐ.தே.க. கட்சியின் புதிய செயற்குழுவும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தின் போது கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவும், செயலாளராக அகிலவிராஜ் காரியவசமும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி யாப்புக்கமைய தலைவருக்கு இருக்கும் தற்றுணிவு அதிகாரத்துக்கமைய 21 பேர் அவரால் செயற்குழுவுக்கு நியமிக்கப்படவுள்ளனர். மீதமுள்ள செயற்குழு உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி உயர் மட்ட உத்தியோகத்தர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எம்.ஏ.எம். நிலாம்

 

Sat, 01/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை