சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் வெள்ளமாக திரண்ட மக்கள் கூட்டம்

அமெரிக்கா மீது பழிதீர்க்க உறுதி

அமெரிக்காவின் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட குத்ஸ் படை தளபதி காசெம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவில் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பக்தாதில் வைத்து ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே சுலைமானி கொல்லப்பட்டார்.

சுலைமானியின் இறுதிக் கிரியை நிகழ்வுகள் நேற்று டெஹ்ரான் நகரில் நடைபெற்றபோது ஈரானிய உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லாஹ் கமனெய் தொழுகை நடத்தினார். ஒரு தருணத்தில் அவர் அழும் தளர்ந்த குரல் கேட்டது.

சுலைமானி கொல்லப்பட்டதற்கு கடுமையாக பழிதீர்க்கப்படும் என்று ஈரான் எச்சரித்திருப்பதோடு, 2015 அணு சக்தி உடன்படிக்கையில் இருந்து கடந்த ஞாயிறன்று விலகிக் கொண்டது.

மத்திய கிழக்கில் ஈரானின் இராணுவ செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்த 62 வயது சுலைமானியை, அமெரிக்கா ஒரு பயங்கரவாதியாக அழைத்து வந்தது.

ஈராக் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் இராணுவத் தரப்பினர் மீது உடனடித் தாக்குதல் ஒன்றுக்கு சுலைமானி திட்டமிட்டிருந்ததாக டிரம்ப் குற்றம்சாட்டினார்.

சுலைமானி மகள் சூளுரை

இந்நிலையில் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தை சூழ நேற்று சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளம்போல் திரண்டனர். சுலைமானியின் புகைப்படங்களை ஏந்தியபடி அவர்கள் ஒன்று கூடியனர். சுலைமானிக்காக தொழுகை நடத்தும்போது உயர்மட்டத் தலைவருக்கு அருகில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி, சபாநாயகர் அல் லர்ஜானி ஆகியோரும் வரிசையாக இருந்தனர்.

கடும் குளிருக்கு மத்தியில் நேற்றுக் காலை கூடியிருந்தவர்களிடம் உரை நிகழ்த்திய சுலைமானியின் மகள் செய்னப், தனது தந்தையின் மரணத்திற்காக அமெரிக்காவும் அதன் கூட்டாளியான இஸ்ரேலும் இருண்டு நாட்களுக்கு முகம்கொடுக்கும் என்றார்.

“எனது தந்தை உயிர்த் தியாகம் செய்த உடன் எல்லாம் முடிந்து விட்டதாக முட்டாள் டிரம்ப், நினைக்க வேண்டாம்” என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உரையில் அவர் தெரிவித்தார். “மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க படையினரின் குடும்பங்கள் தமது குழந்தைகளின் மரணத்திற்காக காலத்தை கழிக்க வேண்டு இருக்கும்” என்றும் அவர் ஆரவாரத்திற்க மத்தியில் குறிப்பிட்டார்.

இந்த இறுதி ஊர்வலத்தில் சுலைமானிக்கு பதிலாக குத்ஸ் படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரகேடியர் ஜெனரல் இஸ்மாயில் கானியும் பங்கேற்றிருந்தார்.

“உயிர்த் தியாகம் செய்த சுலைமானியின் வழியில் நடப்போம் என்று நாம் வாக்குறுதி அளிக்கிறோம். இதற்கு ஈடான ஒரே வழி பிராந்தியத்தில் இருந்து அமெரிக்காவை அகற்றுவதாகும்” என்று அரச வானொலிக்கு கானி குறிப்பிட்டார்.

இந்த இறுதிக் கிரியையில் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் மூத்த அரசியல் தலைவரான இஸ்மைல் ஹனியான் உட்பட பிராந்தியத்தின் ஈரானிய கூட்டணியின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

“தியாகத் தளபதி சுலைமானி ஜெரூசலத்தின் தியாகி என்று நான் பிரகடனம் செய்கிறேன்” என ஹனியான் குறிப்பிட்டார்.

பழிதீர்ப்பதில் உறுதி

சுலைமானியின் உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈராக்கில் இருந்து ஈரானின் அஹ்வாஸ் நகருக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் ஈரானின் பல நகரங்களிலும் இடம்பெற்ற வருவதோடு அங்கெல்லாம் மக்கள் வெள்ளம் போல் திரண்டு காணப்படுகின்றனர். சுலைமானியின் உடல் புனித நகரான கோமுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் இன்று தனது சொந்த நகரான கர்மானில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பக்தாத் விமான நிலையத்தில் இருந்து பயணித்த வாகனத் தொடரணி மீது நடத்தக்கட்ட இந்தத் தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்பட்டனர். இதில் ஈரான் ஆதரவு பெற்ற ஈராக் போராட்டக் குழு தலைவர் அபூ அஹ்தி அல் முஹன்திஸும் கொல்லப்பட்டார்.

கடுமையான பழிதீர்க்கும் நடவடிக்கை ஒன்று பற்றி ஈரான் உயர்மட்டத் தலைவர் எச்சரிக்கை விடுத்திருப்பதோடு லெபனான் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா உட்பட பிராந்தியத்தின் ஈரான் ஆதரவு தரப்பினர் பதிலடி குறித்து உறுதி அளித்துள்ளனர்.

எனினும் ஈரான் எவ்வாறான பதில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது தெளிவில்லாமல் இருப்பதோடு அவ்வாறான நடவடிக்கை ஒன்று மூன்று நாள் துக்க தினத்திற்கு பின்னரே இடம்பெற வாய்ப்பு உள்ளது.

சுலைமானியின் படுகொலை பிராந்தியத்தில் போர் பதற்றத்தை எப்போது இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. எனினும் 2015 ஆம் ஆண்டு ஈரான் மற்றும் உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா விலகிக் கொண்டது தொடக்கம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் ரொக்கெட் குண்டு

இதேவேளை 2015 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையில் உள்ள எந்த ஒரு கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டிய கடப்பாடு தமக்கு இல்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், யுரேனிய செறிவூட்டல் திறனை தாங்கள் குறைத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறி உள்ளது. டெஹ்ரானில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் இந்த அறிவிப்பை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.

யுரேனிய செறிவூட்டல் திறனை அதிகரிக்கும்பட்சத்தில் ஈரானால் சில மாதங்களில் அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என நம்பப்படுகிறது.

மறுபுறம் பக்தாத் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் இரு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்து விளக்கம் கோர அமெரிக்க தூதுவரை ஈராக்கிய வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுத்து சில மணி நேரத்திற்கு பின்னரே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவே அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது 14 ஆவது தடவையாக இருந்தது.

இதில் மூன்றாவது ரொக்கெட் குண்டு ஒன்று பக்தாத் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் வீடு ஒன்றில் விழுந்து நால்வர் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க துருப்புகளை வெளியேற்ற தீர்மானம்

சுலைமானியின் கொலையை அடுத்து அமெரிக்கா மற்றும் வெளிநாட்டுத் துருப்புகள் ஈராக்கை விட்டு வெளியேறும்படி ஈராக் பாராளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈராக் பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வில் ஈராக்கில் 5,200 அமெரிக்கத் துருப்புகள் நிலைநிறுத்தப்படுவதற்கு காரணமான அமெரிக்காவுடனான ஈராக்கிய அரசின் உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், சுன்னி மற்றும் குர்திஷ் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், இந்த தீர்மானத்தை விரும்பவில்லை. இதனால், அவர்கள் பாராளுமன்றத்துக்கு வரவில்லை.

எனினும் அமெரிக்க படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால் பொருளாதாரத் தடைகளுக்கு ஈராக் ஆளாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, “பல பில்லியன் டொலர் மதிப்பிலான விலை உயர்ந்த விமானத் தளங்களை கட்ட அமெரிக்கா அளித்த பணத்தை ஈராக் திரும்ப அளிக்கும்வரை அமெரிக்கப் படைகள் அந்நாட்டிலிருந்து வெளியேறாது. எங்கள் படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால் நாங்கள் அவர்கள் இதற்கு முன்னர் பார்த்திருந்த வகையில் பொருளாதார தடைகளை விதிப்போம்” என்றார்.

டிரம்பின் தலைக்கு பரிசு

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு ஈரான் விலை அறிவித்தது.

ஈரானிய தொலைக்காட்சி அறிவிப்பு ஒன்றில் அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ஈரானில் 80 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். எனவே அதனை அடிப்படையாகக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 80 மில்லியின் அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஈரானைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் சார்பில் 1 அமெரிக்க டொலர் வழங்கி உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

முன்னதாக, ஈரான் ஜனாதிபதி பேசுகையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது எங்களால் தாக்குதல் நடத்த முடியும். அதற்கான சக்தி எங்களிடம் உள்ளது, சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம். போர் அறிவிக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்குத் தான் தோல்வியாக அமையும் என்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மீது ஈரான் போர் தொடுக்க நினைத்தால், அங்கு அடைத்துவைக்கப்பட்ட பிணைக் கைதிகளை குறிக்கும் வகையில் ஈரானுக்கு சொந்தமான 52 இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

போர் குற்றம்

ஈரானிய கலாசாரத் தலங்களை தாக்குதவதாக டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை ஈரான் மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச சட்டத்தின்படி அவ்வாறான தாக்குதல் ஒரு போர் குற்றமாக கருதப்படுகிறது.

ஈரானில் இரண்டு டஜன் அளவு யுனெஸ்கோ மரபுரிமை சொத்துகள் உள்ளன. தமது கலாசாரம், வரலாறு மற்றும் விஞ்ஞானரீதியான முக்கியத்துவங்களை பாதுகாப்பதற்கான அவசியல் இருப்பதாக ஐ.நா கலாசார அமைப்பு நம்புகிறது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர், ஹிட்லர், மங்கோலிய அரசன் செங்கிஸ் கான் ஆகியோரைப் போன்று கலாசாரத்தை வெறுப்பவர் டிரம்ப் என்று ஈரானியத் தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் ஜாவத் அஸாரி ஜாரோமி தெரிவித்தார். அத்துடன், ஈரானையும், அதன் கலாசாரத்தையும் யாராலும் அழிக்க முடியாது எனும் பாடத்தை டிரம்ப் விரைவில் படிக்கவிருக்கிறார் என்றும் ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்த பதற்ற சூழலில் எண்ணெய் விலை நேற்று மேலும் 2 வீதத்தால் அதிகரித்து பீப்பாய் ஒன்று 70 டொலருக்கு மேல் உயர்ந்திருந்தது.

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை