காரைதீவு பிரதேச சபையில் இரு பிரேரணைகள் நிறைவேற்றம்

காரைதீவு பிரதேச சபையில் அண்மைக்காலமாக கலந்துரையாடப்பட்டு சர்ச்சைக்குரியதாக மாறியிருந்த இரு பிரேரணைகள் நேற்று நிறைவேற்றப்பட்டன.

காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (13) தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்ற இவ் அமர்வில் மாளிகைக்காட்டில் மாடறுக்கும்மடுவம் அமைத்தல் மற்றும் மாவடிப்பள்ளியில் மாட்டிறைச்சிக்கடை வழங்கும் செயற்பாடு தொடர்பிலான சர்ச்சைக்குரிய இரு பிரேரணைகள் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டிருந்தன.

மாவடிப்பள்ளியில் காரைதீவு பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ப.நோ.கூ. சங்க வளவில் இறைச்சிக்கடையமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவடிப்பள்ளி உறுப்பினர் எம்.ஜலீல் உரைநிகழ்த்தினார்.

இறுதியில் தவிசாளர் அதனை வாக்கெடுப்பிற்கு விட்டபோது 6 வாக்குகள் ஆதரவாகவும் 5 வாக்குகள் எதிராகவும் 1 வாக்கு நடுநிலையாகவும் அளிக்கப்பட்டது.

இப்பிரேரணை 1 வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.

இறைச்சிக்கடையை ப.நோ.கூ.சங்க வளாகத்தில் தற்காலிகமாக அமைப்பது, மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் தனியார் காணியில் வழங்குவது என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மாளிகைக்காடு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் கொண்டுவந்த மாளிகைக்காட்டில் மடுவம் அமைப்பதற்கு அனுமதி அளித்தல் என்ற பிரேரணை சபையில் விடப்பட்டது. உறுப்பினர் சி.ஜெயராணி வழிமொழிந்தார்.

அதற்கு உபதவிசாளர் எம்.ஜ.எம்.ஜாகீர் மற்றும் உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றினர்.

அதுவும் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. 8 வாக்குகள் ஆதரவாகவும் 3 வாக்குகள் எதிராகவும் 1 வாக்கு நடுநிலையாகவும் அளிக்கப்பட்டது.

இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டிருப்பதனால் மடுவம் அமைப்பதற்கான அனுமதி இதனால் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது தவிசாளர் உரையாற்றுகையில்:

நாம் இந்துக்கள் மாடறுப்பதை எதிர்ப்பவர்கள். இருந்தபோதிலும் எமது சபைக்குள் வாழுகின்ற முஸ்லிம் சகோதரர்களது விருப்பிற்கு நாம் மதிப்பளித்து கடை மற்றும் மடுவம் அமைப்பதற்கு அனுமதியளித்துள்ளோம். சர்வாதிகாரியாக நான் செற்படமுடியாது. இது தமிழ், முஸ்லிம் மக்களுக்கான சபை. ஜனநாயக ரீதியில் தான் நான் செயற்படுவேன்.

காரைதீவு பிரதேச சபை என்று உதயமாகியதோ அன்றிலிருந்து அப்பகுதிக்குள் வரும் அத்தனை காணிகளும் சொத்துக்களும் சபைக்கே சொந்தமானவை.

மாவடிப்பள்ளி மாளிகைக்காட்டில் அங்காடிக்கடை குத்தகைக்காரர் வரி அறவிடச்சென்றால் மறுக்கப்படுகிறதாம். ஆனால் இங்குள்ள அனைத்து வரப்பிரசாதங்களும் கழிவகற்றல் பணிகள் எல்லாம் சீராகசெய்யப்பட வேண்டுமெனக் கோருகிறீர்கள். வருமானத்திற்கு உதவிசெய்யமாட்டோம். ஆனால் சலுகைகளை அனுபவிப்போம் என்ற நிலைப்பாட்டிலிருப்பது ஆரோக்கியமானதல்ல.

மாவடிப்பள்ளி மாட்டிறைச்சிக்கடை ரெண்டர் 18 இலட்ச ரூபாவிற்கு எடுத்தவருக்கு இடம்கொடுக்க வேண்டியது சபையின் கடமையாகும்.

எனது காலத்தில் சபைக்குரிய சொத்துக்களை அழிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்றார்.

சபையின் ஒரேயொரு பெண் உறுப்பினர் சி.ஜெயராணி கூறுகையில் காரைதீவின் சகல பகுதிகளிலும் டெங்கு நோய் பரவி வருகிறது. எனவே சுகாதாரத் துறையினர் சகல பகுதிகளிலும் புகைவிசிற வேண்டும் என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

Tue, 01/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை