இழந்தோரை எண்ணி வாழ்வோரை இழப்பதற்கு தயாரில்லையென உருக்கம்

சுயநலம் கொண்ட சங்கம் வேண்டாமெனவும் உறவினர்கள் அமைச்சரிடம் தெரிவிப்பு

''சுயநலம் கொண்டவர்களால் கையாளப்படும் காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் எமக்குத்​ேதவையில்லை. எமது பிள்ளைகள் இன்னும் உயிருடன் இருப்பார்கள் என நாம் நம்பவில்லை. இழந்த உறவுகளை எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகளைப் பாதுகாக்க எமக்கு நிரந்தரமான வாழ்வாதாரக் கட்டமைப்பை பெற்றுத்தாருங்கள்'' என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர், மிகவிரைவில் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசி உண்மைகளைக் கண்டறிவதுடன் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து தேவைப்பாடுகளையும் பரிகாரமாகப்  பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை சந்தித்து தமது அவல நிலைமைகள் தொடர்பில் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலிகளை அரசியல்வாதிகள் தமது சுயநலத்தேவைக்காகப் பயன்படுத்தகின்றனர். இதனால் நாம் தீர்வுகளையோ பரிகாரங்களையோ பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இழந்துபோன உறவை நினைத்து நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் பிள்ளைகளை, குடும்பத்தை இனியும் இழக்க விரும்பவில்லை. எமது வாழ்க்கை நிலை இன்று மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சில சமயங்களில் நாம் ஒரு வேளை உணவு கூட உண்பதற்கு வழியில்லாமல் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அமைத்து இத்தனை நாட்களாக போராட்டங்களை மேற்கொள்கின்றார்கள். இதில் போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் அதை இயக்குபவர்களால் நன்மை பெற்று வருகின்றார்களே தவிர எம்மைப்போன்ற வறியவர்களுக்கு எதனையும் பெற்றுத்தர முன்வருகின்றார்கள் இல்லை.

சுயநலம் கொண்ட சுயநலவாதிகளின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் எமக்கு வேண்டாம். அதை நாம் ஏற்கப்போவதில்லை. எமக்கு நியாயமான தீர்வு வேண்டும் உண்மை நிலை வேண்டும். காணாமல் போன எமது உறவுகளின் உண்மை நிலை என்னவென்று எமக்கு தெரியும்.

எஞ்சியுள்ள எமது பிள்ளைகளையும் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள எமக்கு நிரந்தர பரிகாரத்தை பெற்றுத்தருமாறு கோருகின்றோம் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைளை ஆராய்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேசி பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் மிக விரைவில் அக் குடும்பங்களின் வாழ்வாதார நிலையும் கட்டியெழுப்பப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் -

நாட்டில் நடைபெற்ற அழிவு யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலரின் நிலைமைகள் தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்படாதுள்ளது. அதுமட்டுமல்லாது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவர்களது உறவுகள் வீதிகளில் இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

இந்த உறவுகளின் கண்ணீருக்கும் அவர்களது கோரிக்கைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முண்டுகொடுத்து வந்த நல்லாட்சி அரசு எதுவித தீர்வுகளும் பெற்றுக்கொடுக்காது தமது சுயநல அரசியலுக்காக அவர்களது உணர்வுகளையும் போராட்டத்தையும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.. நான் தற்போதைய அரசின் அமைச்சர் என்ற வகையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடி வீதிகளில் போராடும் உறவுகளை அழைத்து அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உங்களின் ஒத்துழைப்பை கோருகின்றேன். அதற்கு இன்று நீங்கள் ஆதரவு தந்துள்ளதால் நிச்சயமாக வெகு விரைவில் உங்களது எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் பரிகாரங்களை பெற்றுக் கொடுக்க நான் ஏற்பாடுகளை செய்வேன் என்றும் தெரிவித்தார்.

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை