இலங்கை - இந்திய அமைச்சர்கள் முதலீடு, பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வு

வெளிநாட்டமைச்சர் தினேஸ் குணவர்தன அவரது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பையேற்று கடந்த 9ஆந் திகதி இவர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதனையடுத்து கடந்த நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மேற்கொண்ட இந்திய விஜயம் ஆகியவற்றையடுத்த உயர்மட்ட பரிமாற்றங்களின் ஒரு அங்கமாக இந்த விஜயம் அமைந்திருந்தது.இந்த விஜயத்தின் போது வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன இந்திய வெளிநாட்டமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை கடந்த ஜனவரி 9ஆம் திகதி புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

முதலீடு, பாதுகாப்பு, மீன்பிடி, அபிவிருத்தி, உதவி, சுற்றுலா, கல்வி, கலாசார கூட்டுறவு உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி இந்த சந்திப்பின் போது பேசப்பட்டன.

உலகளாவிய அரசியல் நிலை பற்றியும் அமைச்சர்கள் ஆராய்ந்தனர்.

இந்தியாவின் வெளிநாட்டு செயலாளர் விஜய் கோகலேயும் இலங்கை வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துப் பேசினார். இதேவேளை இந்திய திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் முயற்சிகள் அமைச்சர் மஹேந்திர நாத் பான்டேயை சந்தித்த இலங்கை வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையின் தொழில்நுட்ப கொள்கையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி, மக்கள் மயப்படுத்தப்பட்ட பொருளாதாரம் மற்றும் இளைஞர்களுக்கான புதிய திறன் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விவரித்தார்.

Sat, 01/11/2020 - 09:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை