அவுஸ்திரேலிய காட்டுத் தீ உக்கிரம்: நியூ சவுத் வேல்ஸில் அவசர நிலை

தீவிரம் அடைந்து வரும் காட்டுத் தீ காரணமாக அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு வார காலம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் மற்றும் கடும் காற்று காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தீ ஆபத்தான நிலையில் பரவிவருகிறது. இந்தக் காட்டுத் தீ சம்பவங்களால் கடந்த செப்டெம்பர் தொடக்கம் இதுவரை 18 பேர் உயிரிழந்திருப்பதோடு நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களில் 1,200க்கும் அதிகமான வீடுகள் அழிந்துள்ளன.

இந்த வாரத்தில் மாத்திரம் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவங்களால் மாத்திரம் 17 பேர் வரை காணாமல்போயுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸின் சுற்றுலாத் தலங்களில் இருந்து ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி இருப்பதோடு நகரங்கள் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் அடுத்த ஏழு நாட்களுக்கு அவசர நிலை அமுல்படுத்தப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதலமைச்சர் பிரஜிக்லியா நேற்று அறிவித்தார்.

இது மக்களை கட்டாயமாக வெளியேற்றுதற்கும் மக்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கும் செய்யவேண்டிய எல்லாவற்றையும் மேற்கொள்ள உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத் தீ மோசமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அந்த மாநிலத்தின் தெற்குக் கரையோரத்திலிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல மாநிலங்களை நிலைகுலைய வைத்த காட்டுத் தீ, இவ்வார இறுதியில் மோசமடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெப்பநிலை சனிக்கிழமைக்குள் அதிகரிக்கும் என்பதால், தென் கிழக்குக் கரையில் உள்ள அனைவரும் அடுத்த 2 நாட்களுக்குள் வெளியேறிவிட வேண்டும் என்று தீயணைப்புச் சேவை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அந்த மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ இன்னமும் எரிந்த வண்ணம் உள்ளது. அவற்றுள் பாதியளவு மட்டுமே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை