திருகோணமலை துறைமுகத்தை தனியாருக்கு வழங்க மாட்டோம்

பிறிமா ஒப்பந்தம் தொடர்பில் உண்மையைக் கண்டறிவோம்

திருகோணமலை துறைமுகத்தை ஒருபோதும் தனியாருக்கு வழங்கப் போவதில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனியார் துறையினர் நோக்கும் விதத்தில் திருகோணமலை துறைமுகத்தை பார்த்து அதற்கிணங்க அதனை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறிமா மற்றும் டோக்கியோ நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் ஒரு மாதத்திற்குள் ஆராய்ந்து அதன் உண்மைநிலை கண்டறியப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தாம் தமது செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இரண்டு ஒப்பந்தங்கள் தொடர்பிலும் ஆராயுமாறும் அந்த ஒப்பந்தங்களிலுள்ள நன்மை, தீமைகள் தொடர்பில் தேடிப்பார்க்குமாறும் தாம் பணித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ திருகோண மலைக்கு விஜயம் செய்து அங்கு துறைமுகம் தொடர்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நானும் இராஜாங்க அமைச்சரும் துறைமுக அமைச்சுக்கு புதிதானவர்கள். அந்த வகையில் துறைமுகத்தை கண்காணிக்கவும் அது தொடர்பில் ஆராயவும் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் கவனம் செலுத்தவும் எதிர்கால அபிவிருத்தி மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே திருகோணமலைக்கு வந்துள்ளேன். திருகோணமலை துறைமுகத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம். இது உலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகமாகும். எனினும் டோக்கியோ நிறுவனம், பிரீமா நிறுவனம் மற்றும் இந்தியன் ஒயில் நிறுவனம் ஆகியவை மூன்று மட்டுமே இதில் இயங்குகின்றன. இத்தகைய துறைமுகமொன்று தனியார் துறையினரிடமிருந்தால் அது எந்தளவில் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கும்என சிந்தித்துப் பார்க்கவேண்டும் .

நாம் ஒருபோதும் திருகோணமலை துறைமுகத்தை தனியாருக்கு வழங்கப் போவதில்லை.

கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செயற்பட்டது போல் நாம் செயற்படமாட்டோம். அது ஒரு தேசிய குற்றமாகும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றவர்களுக்கு சாபமே மிஞ்சும். அதனால்தான அதனை விற்றவர்கள் ஐந்து வருடத்தில் வீட்டுக்குப் போக நேர்ந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் எந்தவொரு அரச வளத்தையும் விற்பதற்கு வரவில்லை. உள்ளதைப் பாதுகாத்து முன்னேற்றும் அரசாங்கம் தான் எமது அரசாங்கம். என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

 

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை