பங்கபந்து தங்கக் கிண்ணத்திற்கான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து தங்கக் கிண்ண கால்பந்து தொடருக்கான 23 பேர் கொண்ட இலங்கை குழாமில் இருந்து சுஜான் பெரேரா மற்றும் மொஹமட் ஆகிப் நீக்கப்பட்டு ஐந்து அனுபவ வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கையின் சிறந்த வீரராக செயற்பட்ட சுஜான் பெரேரா நீக்கப்பட்டது எதிர்பாராத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மொஹமட் ஆகிப், டுக்சன் பியுஸ்லஸ், சசங்க டில்ஹார, மொஹமட் முஷ்டாக், மதுஷான் டி சில்வா மற்றும் நவீன் ஜூட் ஆகியோரும் இலங்கை குழாத்தில் இடம்பெறவில்லை என்பதோடு சமோத் டில்ஷான் முழங்கால் உபாதை காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

எனினும் ஓர் ஆண்டுக்கு மேற்பட்ட கால இடைவேளைக்குப் பின்னர் சர்வான் ஜொஹார், எடிசன் பிகுராடோ, கனரூபன் வினோத், ருவன் அனுரசிறி மற்றும் அமித் குமார ஆகியோரை இலங்கை கால்பந்து சம்மேளனம் தேசிய அணிக்கு அழைத்துள்ளது. துர்க்மனிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட ஷபீர் ரசூனியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தர்மகுலனாதன் கஜகோபன் முதல் முறை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வரும் ஜனவரி 15 முதல் 25 ஆம் திகதி வரை 2020 பங்பந்து தங்கக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ளது. பங்களாதேஷ் கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு பங்களாதேஷ் தேசத்தின் தந்தையான ஷெய்க் முஜிபுர் ரஹ்மானின் பெயரிலேயே ஆறாவது தடவையாக இந்தத் தொடர் நடைபெறுகிறது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் ஆரம்ப சுற்றில் இரு குழுக்களாக ஆடவுள்ளன. உலகத் தரவரிசையில் 205 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி ஏ குழுவில் பங்களாதேஷ் மற்றும் பலஸ்தீன அணிகளுடன் ஆடவுள்ளது.

இந்த இரு அணிகளும் முறையே 187 மற்றும் 106 ஆவது இடத்தில் உள்ளன. பி குழுவில் பிருண்டி (151), மொரிசியஸ் (172) மற்றும் சிசேல் அணிகள் உள்ளன. இதற்கு முன்னர் இலங்கை அணி 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்த தொடரில் பங்கேற்று ஆரம்ப சுற்றிலேயே வெளியேறியது.

நடப்புச் சம்பியனாக இருக்கும் பலஸ்தீன் 2018 ஆம் ஆண்டு தொடரில் தஜிகிஸ்தானை பெனால்டி சூட் அவுட் முறையில் 4–3 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை