கொரோனா தியத்தலாவை இராணுவ முகாமில் வைத்தியசாலை

33 மாணவர்களும் இலங்கை வருகை

சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர சிகிச்சையளிப்பதற்காக 48 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவம் வைத்திய முகாம் ஒன்றை அமைத்துவருகின்றது.

இரண்டு அறைகள் கொண்ட இந்த வைத்திய முகாமில் சீனாவிலிருந்து வரும் மாணவர்கள் இரண்டு வாரங்கள் தங்கவைக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தபடுவார்கள்.

சீனாவிலிருந்து அழைத்து வருபவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பாமல் தியத்தலாவை இராணுவ வைத்தியசாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வைத்திய முகாமில் தங்க வைத்து இரு வாரங்கள் பரிசோதித்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரமே தியத்தலாவ இராணுவத்தின் எஸ்.எஸ். கமாண்டோர் மேஜர் ஜெனரல் வடுகே தலைமையில் இரண்டு அறைகள் கொண்ட வைத்திய முகாமை 48 மணி நேரத்தில் தியத்தலாவ இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.

இலங்கை வரலாற்றிலேயே ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் வைத்திய முகாம் அமைக்கபடுகின்றமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

 

சீனாவில் 170க்கு மேற்பட்டோர் பலி

கொரோனா வைரஸ் காரணமாக தற்போதுவரை சீனாவில் 170 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 ஆயிரத்து 753 பேர் நோய் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் அங்கு பணிபுரியும் இலங்கையர்களும், மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

சீனாவிலுள்ள மாணவர்கள் அனைவரையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரைவிடுத்ததையடுத்து வூஹான் மாநிலத்தை தவிர்ந்த ஏனைய மாணவர்கள் அனைவரும் கட்டம் கட்டமாக நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

எனினும் வூஹான் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக இருப்பதனால் அங்குள்ள இலங்கை மாணவர்கள் வெளியே வருவதற்கு சீனா அனுமதியளிக்கவில்லை. இதன் காரணமாக இம் மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு முடியாமலுள்ள போதும் 24 மணி நேரமும் சீனாவிலுள்ள இலங்கை இராஜதந்திரிகள் அவர்களின் நலன் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் அமைச்சின் கிழக்காசியப் பிராந்தியத்தின் பணிப்பாளர் நாயகம் பா. காண்டீபன் தெரிவித்தார். சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஹூபெய் மாயிலத்தில் 162 பேரும் பெய்ஜிங், ஹெபெய், ஹெய்னன், சங்ஹை, சீச்சுவான், ஹெயிலொன்ங்ஜியாங் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் வீதமும் ஹெனான் மாநிலத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

அதனை தவிர சீனா முழுவதும் 7 ஆயிரத்து 753 பேர் கொரோனா நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 132 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 139 பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெய்ஜிங்கில் 114, ஹெபெய் மாநிலத்தில் 65, டியன்ஜியனில் 29, ஹூபெய்யில் 4,586, சீஜியெங்கில் 428, குவாங்டொங்கில் 311, ஹெனானில் 278, ஹுனானில் 277, கொங்சிங்கில் 165, அன்ஹூய்யில் 200, ஷன்டொங்கில் 145, ஜியங்சியில் 162, சீச்சுவானில் 142, ஜியெங்ஷூவில் 129, ஷங்ஹையில் 101, ஜியெனில் 101, குவங்ஷியில் 78, யுனானில் 70, ஷான்சியில் 63, ஹெய்னனில் 46, ஹெயிலொங்ஜியெங்கில் 43, லியோனிங்கில் 41, ஷான்க்ஸியில் 35, கான்சுவில் 26, மொங்கோலியாவில் 18, நின்சியாவில் 17, ஜிலினில் 14, ஷின்ஜியெங்கில் 14, கிஷூவில் 12, ஹொங்கொங்கில் 10, தாய்வானில் 08, மெக்கோவில் 07, ச்சின்ஹாயில் 6 , திப்பெத்தில் ஒருவரும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாய்லாந்து (14), ஜப்பான்(11), சிங்கப்பூர் (10), அவுஸ்திரேலியா (7), மலேசியா (7), பிரான்ஸ் (5), அமெரிக்கா (5), ஜேர்மனி(4), தென் கொரியா(4), ஐக்கிய அரபு இராச்சியம் (4), கனடா (3), வியட்நாம் (2), கம்போடியா (1), பின்லாந்து (1), நேபாளம் (1) மற்றும் இலங்கை (1) ஆகிய நாடுகளுக்கு பரவியிருப்பதாகவும் உத்தியோகப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹற்றன் சுழற்சி நிருபர், லக்ஷ்மி பரசுராமன்

 

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை