சபாநாயகரிடம் ரஞ்சன் கையளித்தது உண்மையே

ரஞ்சன் ராமநாயக்க 15,000 குரல் பதிவுகள் அடங்கிய 5 இறுவட்டுக்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தமை உண்மையெனவும் அதனை தாம் நேரில் கண்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா சபையில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் நேற்று சபையில் தெளிவுப்படுத்துகையில், ரஞ்சன் ராமனாயக்க இறுவட்டுக்களை கையளித்தமையும் அதற்கான பற்றுச்சீட்டை அவர் செயலாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக்கொண்டதையும் நான் நேரில் கண்டேன். அது தொடர்பில் வெளிவரும் தகவல்கள் உண்மையானவை.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 15,000 குரல் பதிவுகள் உள்ளடங்கிய 5 இறுவட்டுக்களை சபையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சமர்ப்பித்ததாக நான் கூறியிருந்தேன். என்றாலும் பிரதி சபாநாயகர் அவ்வாறு இறுவட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லையென கூறியுள்ளார்.

நான் சபையில் இருக்கும்போதுதான் ரஞ்சன் ராமநாயக்க இந்த 5 இறுவட்டுகயையும் சபையில் சமர்ப்பித்திருந்தார். பாராளுமன்ற பொதுச் செயலாளரின் கைகளில்தான் இவர் இறுவட்டுக்களை கையளித்தார். இந்த இறுவட்டுக்களை பெற்றுக்கொண்டு பதிவொன்றை மேற்கொண்ட பாராளுமன்ற செயலாளர் நாயகம் ரஞ்சன் ராமநாயக்கவை ஹன்சார்ட் பிரிவில் கையளிக்குமாறு அனுப்பினார்.

அவர் இறுவட்டுக்களை கையளிக்க செல்லும் தருணத்தில்தான் அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. இறுவட்டுக்களை சமர்ப்பிப்பதில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்தும், அந்த இறுவட்டுக்கள் செயற்படவில்லையென இன்று (நேற்று) ரஞ்சன் என்னிடம் கூறினார். நான் எனது பெயருக்கு பங்கம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. இதுதான் நடந்த சம்பவம்.

ஊடகங்கள் எனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கேள்வியெழுப்புகின்றன. அவர் உண்மையாகவே இறுவட்டுகக்ளை செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளதுடன், அதற்கான பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 01/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை