சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: மாற்றம் கலந்த இலங்கை அணி அறிவிப்பு

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், மாற்றம் கலந்த இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக பாகிஸ்தான் மண்ணில் விளையாடிய இலங்கை அணியிலிருந்து, இந்த அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா, இந்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், பாகிஸ்தான் தொடரில் மேலதிக வேகப் பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டிருந்த அசித பெர்னாண்டோவும் நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கு பதிலாக காயத்திலிருந்து குணமடைந்துள்ள அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

மேலும், அனுபவ வீரர்களான அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் டில்ருவான் பெரேரா ஆகிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சுரங்க லக்மால் அணியின் வேகப் பந்துவீச்சு துறையை வழிநடத்தவுள்ளதுடன், பாகிஸ்தானில் சிறப்பாக பந்துவீசிய லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை, டில்ருவன் பெரேரா, லசித் எம்புல்தெனிய மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

திமுத் கருணாரத்ன தலைமையிலான அணியில், லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தடைக்கு உள்ளாகிய சிம்பாப்வே கிரிக்கெட் அணி, குறித்த தடைக்குப் பின்னர் இலங்கை அணியுடன் விளையாடவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே அவர்களது முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக அமைகின்றது.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமே சிம்பாப்வே 2018ஆம் ஆண்டின் நவம்பரிற்குப் பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கின்றது.

இறுதியாக இலங்கை அணி ரங்கன ஹேரத் தலைமையில் சிம்பாப்வேவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொடரை 2-0 என வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் இதுவரையில் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.

அதில் 13 போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றுள்ளதுடன், சிம்பாப்வே அணி எந்தவொரு வெற்றியையும் பெறவில்லை.

இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 27ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

இரண்டு போட்டிகளுமே ஹராரே மைதானத்தில் நடைபெறுகின்றன.

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை