அனைத்து வகை கிரிக்கெட்டிற்கும் விடைகொடுத்தார் இர்பான் பதான்

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இர்பான் பதான் அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா கிரிக்கெட் விளையாட்டை அதிகாரபூர்வமாக ஒளிபரப்புச் செய்யும் நிகழ்ச்சியில் இர்பான் பதான் பங்கேற்றார்.

அப்போது அவரது இந்த முடிவை அவர் அறிவித்தார். 35 வயது ஆன அவர் கடைசியாக கடந்த 2019 ஆண்டு பெப்ரவரி மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சையத் முஷ்டாக் அலி கிண்ணத்திற்கான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இருந்தார்.

கடந்த டிசம்பரில் ஐ.பி.எல் ஏலத்தில் அவரை யாரும் எடுக்காததால் அவர், தனது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி ஓவலில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்் இர்பான் பதான் இந்திய அணியில் அறிமுகமானார்.

சுமார் 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட், 29 டெஸ்ட்டில் 100 விக்கெட் மற்றும் 24 டி20 போட்டிகளில் 28 விக்கெட் சாய்த்துள்ளார்.

கடைசியாக அவர் கடந்த 2012இல் நடந்த டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இர்பான் பதான் கடந்த சனிக்கிழமை தனது சர்வதேச பயணத்துக்கு விடை கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய இர்பான், “நான் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ் லக்ஷ்மண் போன்ற வீரர்கள் உடனும் ஓய்வு அறையை பகிர்ந்து கொண்டது எனக்குப் பெரிய அதிர்ஷ்டம்” என்று நிகழ்ச்சி ஒன்றின் போது கூறியுள்ளார்.

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை