சஜித்தை தலைவராக்கும் பிரேரணை நிராகரிப்பு

மூன்று தினங்களில் முடிவை அறிவிப்பதாக ரணில் தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமென்ற கட்சியின் பாராளுமன்றக் குழு மேற்கொண்ட பரிந்துரையைக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

இப் பரிந்துரையை ஏற்பதா, இல்லையா என்பதைப் பற்றித் தாமும் சபாநாயகர் கருஜயசூரியவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இன்னும் ஓரிரு தினங்களில் கூடிப்பேசிய பின்னர் முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கட்சி யாப்பின் பிரகாரம் தலைவரை நியமிக்கும் அதிகாரம் பாராளுமன்றக் குழுவுக்குக் கிடையாது என்று தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் செயற்குழுவைக்கூட்டியே புதிய தலைவரைத் தெரிவுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கட்சியின் தலைவராகத் தமக்குத் தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் கிடையாது. பொருத்தமான ஒருவரைப் பொருத்தமான முறையில் தலைவராக நியமித்துவிட்டுத் நான் விலகிக்கொள்ளவுள்ளேன் என்றார்.

இதேவேளை, கட்சித் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகியே ஆகவேண்டும் என்று சஜித் அணியினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனாலும், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டமும் எவ்வித தீர்மானமும் இன்றிக் குழப்பத்தில் நிறைவடைந்துள்ளது.

அன்றைய கூட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது ரணில் விக்கிரமசிங்க அணியினர் வெளிநடப்புச் செய்தனர். சஜித் அணியைச் சேர்ந்த 52பேர் மாத்திரம் அவருக்குச் சார்பாக வாக்களித்துத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் எனப் பிரேரணை நிறைவேற்றியுள்ளனர்.

எம்.ஏ.எம்.நிலாம்

 

 

Sat, 01/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை