பிணைமுறி தடயவியல் அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க சபாநாயகர் அனுமதி

இருநாள் விவாதம் நடத்த கட்சிகள் கோரிக்கை

மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று அனுமதி வழங்கினார்.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.இதன்போது தடயவியல் அறிக்கை தொடர்பாக தனது தீர்ப்பை அறிவித்த அவர், அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த அறிக்கையை  சபையில் சமர்ப்பிக்கப்படுவதினூடாக பிணை முறி தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்படும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த அறிக்கையை விரைவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்கச் செய்வதாக குறிப்பிட்ட அவர் அது வரையில் பாராளுமன்ற நூலகத்தில் அந்த அறிக்கையை வாசிக்க முடியுமெனவும் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், பொது நிறுவனங்கள் தொடர்பான(கோப்) குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் உள்ள விடயங்களை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிந்துகொள்ளும் வகையில் சபைக்கு சமர்பிக்குமாறு பாராளுமன்றத்திலும் வெளியிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதேபோன்று ஜனவரி 13ஆம் திகதி நடத்தப்பட்ட பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போதும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக கவனம் செலுத்தி இதனை சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பிணை முறி விவகாரம் தொடர்பாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இந்த முடிவு எந்த விதத்திலும் தடையாகவோ அல்லது அழுத்தம் கொடுக்கும் வகையிலோ அமையாது என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிணை முறி தொடர்பாக விசாரணை நடத்தி பரிந்துரைகைள முன்வைப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய தடயவியல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த விசாரணை அறிக்கைக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது.

இதனை கோப் குழுவில் சமர்ப்பிக்க இருந்தாலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதால் அது தாமதமானது.நிலையியற் கட்டளையின் பிரகாரம் எனக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய பாராளுமன்ற செயற்பாடுகளை எந்த வித வெளிதரப்பினரதும் தலையீடு இன்றி சுயாதீன முடிவு எடுக்கும் உரிமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.எனக்கு முன்பிருந்த சபாநாயக ரான அநுர பண்டாரநாயக்க வழங்கிய வரலாற்று முக்கியமாக தீர்ப்பிற்கு அமைய இது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டது.இதற்கமைய தடயவியல் அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க உகந்தது என முடிவு செய்கிறேன் என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்

Wed, 01/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை