கொரோனா தாக்கம்: இலங்கை மாணவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக சீன தூதரகம் அறிவிப்பு

118மாணவர்கள் நேற்று இலங்கை வந்தடைந்தனர்

சீனாவிலிருந்து நேற்றும் 118இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதனடிப்படையில் நேற்றுவரை (29) மொத்தமாக 498இலங்கை மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. 

இதேவேளை வூஹான் மாநிலம் உள்ளிட்ட சீனாவின் ஏனைய பகுதிகளில் இன்னும் 366மாணவர்கள் இருப்பதாகவும் அமைச்சின் கிழக்காசியப் பிராந்தியத்தின் பணிப்பாளர் நாயகம் பா. காண்டீபன் தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகவுள்ள வூஹான் மாநிலத்தில் தங்கியிருக்கும் 33மாணவர்களையும் சீன அரசாங்கம் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியே வருவதற்கு அனுமதிக்காததால் அவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியாததொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டினார். 

எனினும் சீனாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் வூஹானிலுள்ள 33மாணவர்களுடனும் 24மணி நேரமும் தொடர்பில் இருப்பதாகவும் அம்மாணவர்களின் பாதுகாப்பு தற்போதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார். 

எஞ்சிய மாணவர்களை கட்டம் கட்டமாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. 

சீனாவில் மொத்தமாக 864இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். சில மாணவர்கள் தமது குடும்பத்தாருடன் தங்கியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ சீனாவிலுள்ள இலங்கை மாணவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து அம்மாணவர்கள் கட்டம் கட்டமாக விமானம் மூலம் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.  கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு 14நாட்களுக்குப் பின்னரே அதற்கான அறிகுறிகள் வெளிப்படும் என்பதால் இம்மாணவர்களின் உடல்நிலை குறித்து கண்டறியும் நோக்கில் அவர்கள் தியத்தலாவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 01/30/2020 - 08:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை