கம்பன் விழா இன்று ஆரம்பம்

கொழும்பில் கோலாகல விழா

'கம்பன் புகழ் விருது 2020' பெறுகிறார் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

அகில இலங்கை கம்பன் கழகத்தின் கம்பன் விழா இன்றைய தினம் ஆரம்பமாகிறது. இன்றிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்கள் கம்பன் விழா நடைபெறவுள்ளதுடன் இம் முறை கம்பன் புகழ் விருது தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்படவுள்ளது.

அகில இலங்கைக் கம்பன் கழகம் ஆண்டுதோறும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் 'கவிச்சக்கரவர்த்தி' கம்பனுக்குப் பெருவிழா எடுத்து வருகிறது. இம்முறையும் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆரம்பமாகும் இவ் விழா, காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

கடந்தாண்டுடன் கொழும்பில் கம்பன் கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. அதனையொட்டி இவ்வாண்டு கம்பன் விழா கொழும்பு கம்பன் கழகத்தின் வெள்ளி விழாவாக மலரவுள்ளது. வழமைபோலவே இவ்வாண்டும் நம்நாட்டு, தமிழ்நாட்டு, பிறநாட்டு அறிஞர்கள் பலர் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவ் விழாவில் நாட்டிய அரங்கம், சுழலும் சொற்போர், வழக்காடுமன்றம், கவிநய அரங்கம், பட்டிமண்றம், சிந்தனை அரங்கம், கவியரங்கம், இலக்கிய ஆணைக்குழு, கருத்தரங்கம், நாட்டிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நூல்வெளியீடு, ஆகியவற்றோடு விழாவின் முதல் நாளில் ‘நாவலர் விருது’, ‘விபுலானந்தர் விருது’, ‘மகரந்தச் சிறகு விருது’. ‘நுழைபுலம் ஆய்வு விருது’, ‘ஏற்றமிகு இளைஞர் விருது’ முதலிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விழாவின் நிறைவு நாளான 4 ஆம் திகதி மாலை நம்நாட்டைச் சேர்ந்த ஆறு துறைசார்ந்த அறிஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளதோடு வழமைபோலவே உலகளாவிய தமிழ்ப்பணி செய்த ஒருவருக்கான கம்பன் புகழ் விருதும் வழங்கப்படவுள்ளது. அந்தவகையில் இம் முறை தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் பத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெற்றுக்கொள்கிறார்.

விழா நாட்களில் மண்டப வாயிலில் புத்தகக் கண்காட்சியும் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அமரர் துரை விஸ்வநாதன் நினைவுப் பேச்சுப்போட்டி, அமரர் பொன் பாலசுந்தரம் நினைவுக் கவிதைப் போட்டி என்பவற்றோடு, நாவலர் நற்பனி மன்றம் அமைந்துள்ள அறக்கட்டளை ஆதரவில் இலக்கணவித்தகர் நமசிவாய தேசிகர் ஞாபகார்த்த திருக்குறள் மனனப்போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்க்கான பரிசளிப்புகளும், இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் ஏற்பாட்டில் இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய இலக்கிய பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இவ்விழாவில் நடைபெறும்.

இவ்வாண்டு சமூக சேவை செய்யும் நிறுவனங்களுக்கான நிதியுதவியும் கல்வித் தேவையுள்ள மாணவர்களுக்கான நிதியுதவிகளும் கழகத்தின் சார்பில் வழங்கப்படவுள்ளன.

இவ்விழாவில் மாணவர்களைக் கலந்துகொள்ளவைக்க விரும்பும் கல்லூரிகள் 0772935509 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு கல்லூரியின் பெயர், கலந்துகொள்ள விரும்பும் மாணவர்களின் வகுப்பு, மாணவர்களின் தொகை என்பவை பற்றி அறியத்தரும்படி வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

கலந்துகொள்ள அங்கீகரிக்கப்படும் மாணவர்களுக்கு விழா மண்டபத்தில் இட ஒழுங்கும், உணவு ஒழுங்கும் செய்து தரப்படும். விழாவில் கலந்துகொள்ள விரும்பும் தனியாரும் தொடர்புகொண்டால் அவர்களுக்கும் இவ்வசதிகள் செய்து தரப்படும். கம்பன்விழாவில் அனைத்துத் தமிழ் இரசிகர்களும் கலந்து சிறப்பிக்க வேண்டுமென கம்பன் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நமது நிருபர்

 

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை