நல்லாட்சி அரசில் காணி சுவீகரிப்பில் உரிய மதிப்பீடு வழங்கப்படவில்லை

நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டங்களுக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்ட போது உரிய மதிப்பீடு வழங்கப்படவில்லையென அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து தெரிவித்தார்.

அபிவிருத்தி செயற்பாடுகள் எனும் பெயரில் தம்முடைய தனிப்பட்ட தேவைகளையே நிறைவேற்றி, அசாதாரணமான ஆட்சியொன்றை முன்னெடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிவேக நெடுஞ்சாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்ட அமைச்சர், அங்கு ஊடகவியளாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தியில் மக்கள் இதுவரை காலமும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். கடந்த அரசாங்கத்தினால் செவிசாய்க்கப்படாத மக்களின் பிரச்சினைகள் பல உள்ளன.

அவற்றால் மக்கள் இன்றும் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தின் வேண்டுக்கோளுக்கிணங்க அமைச்சர் என்ற வகையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து, அமைச்சு மட்டத்தில் இப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கிலேயே கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ அரசின் கீழ் காணிகளுக்கான இழப்பீடுகளை வழங்கும் பொழுது காணியின் தற்போதைய பெறுமதிக்கு இழப்பீடுகளை வழங்கவில்லை. மாறாக முப்பது வருடங்களின் பின் இக் காணிகளின் பெறுமதியை கணக்கிட்டே இழப்பீடுகளை வழங்கினோம்.

அபிவிருத்திச் செயற்பாடுகளின் பொழுது மக்களை துன்புறுத்தவில்லை. அது மாத்திரமன்றி இதனை பொருளாதார ரீதியில் மக்களை பலப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். காணிகளை கையகப்படுத்தும் போது அவர்களின் எதிர்காலம் உறுதியான முறையில் பாதுகாக்கப்படும் வகையில் காணிகளுக்கான உரிய பெறுமதிகளை வழங்கிய பின்னரே காணிகளை கையகப்படுத்தினோம்.

2015ஆண்டில் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் மிகவும் கொடூரமான முறையில் மக்களின் பக்கத்திலிருந்து சிந்திக்காது அன்றைய காலக்கட்டத்தில் காணிகளின் மதிப்பை கருத்திற்கொண்டு அதற்கான இழப்பீடுகளை வழங்கி காணிகளை கையகப்படுத்திக் கொண்டனர்.

இம் மதிப்பீட்டு முறையில் பல சிக்கல்கள் உள்ளன. பல கடிதங்களை அனுப்பி இவ்விடயம் தொடர்பில் மக்கள் இன்று எம்மை தெளிவூட்டியுள்ளனர்.

இப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கான கொடுப்பணவை குறைத்தது மாத்திரமன்றி, அன்று மிகவும் அசாதாரணமான முறையிலே மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்றார்.

Sat, 01/18/2020 - 09:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை