முஸ்லிம் திருமண சட்டத்தை நீக்க தனிநபர் பிரேரணை

முஸ்லிம் திருமணச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் நேற்று (08) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமணச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 1907ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விவாக (பொது) கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றையும் அவர் தனிநபர் சட்டமூலமாக  பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 1907ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க, விவாக (பொது) கட்டளைச் சட்டத்தில் மாற்றம் ஏற்படவிருப்பதுடன், முகவுரையில் காணப்படும் முஸ்லிம்களின் திருமணம் தவிர்ந்த என்ற வசனம் நீக்கப்படவுள்ளது.

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக 2009ஆம் ஆண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இதன் தலைவராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்தக் குழு 9 வருடங்கள் இது தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்களை சேகரித்திருந்ததுடன், 2018ஆம் ஆண்டு தமது பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இதன் பின்னர் 2019 ஜுலை முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் அறிக்கையிலுள்ள 14 பரிந்துரைகள் தொடர்பில் இணக்கம் தெரிவித்திருந்தபோதும் பின்னர் அது இடைநிறுத்தப்பட்டிருந்தது.

முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது சரியாகக் குறிப்பிடப்படாமையே தற்போது நடைமுறையில் உள்ள முஸ்லிம் திருமணச் சட்டத்தின் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இச்சட்டத்தின் 23வது சரத்தில் 12வயதுடைய முஸ்லிம் பெண் பிள்ளைகள் காதி நீதிமன்றத்தின் அனுமதியிருந்தால் ஆண் ஒருவரைத் திருமணம் முடிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை