மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கையெழுத்துப் போராட்டம்

பெப்ரவரிக்குள் நியமனம் வழங்காவிடில் கிழக்கு மாகாணம் தழுவிய ஆர்ப்பாட்டம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் நியமனம் வழங்காவிடில் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்படுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிதன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் கையெழுத்துப் போராட்டத்தை  நேற்று (21) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 

அவர் தொடர்ந்தும்  கருத்து தெரிவிக்கையில், வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக பெப்ரவரி மாதத்துக்குள் அரச நியமனங்களை வழங்க வேண்டும். இல்லாவிடில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரமளவில் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட வேண்டி ஏற்படும்.

உள்வாரி, வெளிவாரி, வெளிநாடு, உள்நாடு என்ற பாகுபாடின்றி வயது வித்தியாசமின்றி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். 

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனத்தை இழுத்தடிக்க வேண்டாம். பாராளுமன்ற தேர்தல் நெருங்கினால் தேர்தலை காரணம் காட்டி நியமனங்கள் இழுத்தடிப்புச் செய்யப்படும் எனவே பொது தேர்தலுக்கு முன்னர் எமக்கான நியமனத்தை வழங்க வேண்டும். 

சமுர்த்தி பயனாளிகள் ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில்களை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வேலையற்ற பட்டதாரிகள் கணக்கிலெடுக்கப்படாமலிருப்பது எமக்கு கவலையளிக்கின்றது என  தெரிவித்தார். 

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)  

Wed, 01/22/2020 - 11:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை