பிரதமர் வேட்பாளர் யார்? ஐ.தே.கவுக்குள் புதிய நெருக்கடி

பிரச்சினையை தீர்க்க காலக்ெகடு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாத நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது பற்றிப் புதிய நெருக்கடியொன்று தலைதூக்கியுள்ளது.

இந்தப் புதிய நெருக்கடியைத் தீர்ப்பது குறித்துக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சபாநாயகர் கரு ஜயசூரியவும் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கட்சியின் நம்பகரமான உள்ளகத் தகவல்கள் தெரிவித்தன. தலைமைத்துவ பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கட்சியின் அதிருப்தி அங்கத்தவர்கள் ஒரு வாரம் காலக்ெகடு விதித்துள்ள நிலையிலேயே இந்தப் புதிய நெருக்கடி தலைதூக்கியுள்ளது.

தலைமைத்துவப் பிரச்சினைக்கு நாளைய தினத்திற்குள் தீர்வொன்று எட்டப்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தங்களுக்கிடையிலான பிரச்சினையை ஒரு வார காலத்தில் தீர்த்துக்ெகாள்ள வேண்டுமென்று கட்சி அங்கத்தவர்கள் காலக்ெகடு விதித்துள்ளனர்.

எவ்வாறெனினும், நாளைய தினம் எட்டப்படவுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பொறுப்பேற்பார்கள்.

இரண்டு கட்சிக்கும் சிரேஷ்ட தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார். இதுதான் நாளைய தினம் எட்டப்படவுள்ள இணக்கப்பாடு.

எனினும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தாம் நியமிக்கப்படும் பட்சத்தில், பிரதமர் வேட்பாளராக யார் போட்டியிடுவார்? என்று கட்சியின் தலைவரிடம் சபாநாயகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைமைத்துவ பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அடுத்த பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராகப் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கப்பட வேண்டும் என்று அவரது விசுவாசிகள் கோரிக்ைக விடுத்து வருகின்றனர்.

அதனால், சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கி வெற்றிபெற வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சபாநாயகர் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டால், அவரது நிலைமை என்னவாகும் என்பது தற்போது எழுந்துள்ள புதிய கேள்வி.

எனவேதான் இந்தச் சிக்கல் கட்சிக்குள் புதிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளதாகக் கட்சியின் முக்கிய அங்கத்தவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையின் பிரகாரம், பிரதமர் வேட்பாளர் ஒருவர் பெயரிடப்படாமல், கூடுதலான வாக்குகளைப் பெறும் ஒருவரைப் பிரதமராக நியமிப்பதற்கான முடிவொன்றுக்குக் கட்சியின் முக்கியஸ்தர்கள் வரக்கூடுமென்றும் சிறிகொத்தா வட்டாரங்கள் தினகரனுக்குத் தெரிவித்தன.

எம்.ஏ.எம்.நிலாம்

 

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை