புளூ ஸ்டாருக்கு புதிய தலைவர், பயிற்சியாளர் நியமனம்

இலங்கையின் முன்னணி கால்பந்து கழகங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற களுத்துறை, புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் புதிய தலைவராக ரோஹித்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புளூ ஸ்டார் கழகம் இலங்கையில் மிகப்பெரிய கால்பந்து கழகங்களில் ஒன்றாகும். ஆரம்ப பிரிவுகளில் இருந்து முன்னேற்றம் கண்டு முதல்நிலை பிரிவில் ஆடிய அந்த அணி 2003/04 ஆம் ஆண்டு முதல் லீக் பட்டத்தை வென்றது.

மிகப்பெரிய எண்ணிக்கையிலான மற்றும் ஆர்வம் மிக்க ரசிகர்களைக் கொண்ட அந்த அணி பல தடவைகள் சம்பியன் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை நெருங்கியது. மிக அண்மையில் 2018/19 இல்கூட கடைசி கட்ட சவால்களை வெல்ல அந்த அணி தவறியது.

கடந்த ஒருசில ஆண்டுகளில் நிர்வாகத்தைப் போலவே புளூ ஸ்டார் கழகத்தின் ஆட்டத் திறன் சீரற்று காணப்பட்டது. எனினும் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ரோஹித்த ராஜபக்ஷ, தலைவராக அந்தக் கழகத்தை வலுவான நிலைக்கு இட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்படவுள்ளார்.

“2ஆவது இடம் அல்லது 3ஆவது இடம் அல்ல, தொடரை வெல்வது தான் எமது இலக்காகும். உச்சத்திற்கு செல்லும் திறன் இந்த கழகத்தில் இருக்கும் எல்லோருக்கும் உள்ளது. கழகத்தை உயர்தரத்திற்கு இட்டுச் செல்வதே எமது இலக்கு, அதனையே நாமல் ராஜபக்ஷவும் எம்மிடம் கூறினார். வெற்றிக்கான நோக்கம் எம்மிடம் உள்ளது. உங்களிடம் நோக்கம் இல்லை என்றால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

ஒரு சம்பியனாக ஜெர்சியை அணிந்து உங்களுக்கு அடுத்து இருக்கும் வீரர் மீது எப்போதும் நம்பிக்கை வையுங்கள்” என்று கழக வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்வில் பேசிய புதிய தலைவர் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்தார். புளூ ஸ்டார் கழகம் துவான் ரஹீமை புதிய தலைமை பயிற்சியாளராகவும் நியமித்தது. கழகத்தின் இடைக்கால பயிற்சியாளராக இருந்த மொஹமட் பிச்சைக்கு பதிலாகவே ரஹீம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஹீம் இலங்கை தேசிய அணி மற்றும் விமானப் படையின் முன்னாள் வீரர் ஆவார். விமானப் படை அணிக்கு பயிற்சியாளராக செயற்பட்டிருக்கும் அவர் தற்போது ஹமீட் அல் – ஹுஸைனி கல்லுரிக்கும் பயிற்சியாளராக செயற்படுகிறார்.

Tue, 01/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை