நாமல், ஜோன்ஸ்டனை கைது செய்ய ரஞ்சன் ராமநாயக்க சி.ஐ.டிக்கு அழுத்தம்

குரல் பதிவு ஆதாரங்கள் அம்பலம்

கடந்த ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாந்து ஆகியோரை கைது செய்து தடுத்து வைப்பது தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரியொருவருக்கு அழுத்தம் கொடுக்கும் குரல்பதிவொன்றை மேல்மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவு கைப்பற்றியுள்ளது.  2016முதல் ரஞ்சன் ராமநாயக்க தனது கையடக்க தொலைபேசியினூடாக பெற்ற அழைப்புகள் மற்றும் உள்வரும் அழைப்புகளை சேமித்து வைத்துள்ளதாக சி.ஐ.டி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்‌ஷ,ஜோன்ஸ்டன் பெர்ணாந்து ஆகியோரை சிறை வைப்பது தொடர்பில் அழுத்தம் கொடுக்கும் உரையாடலும் இந்த குரல் பதிவுகளிடையே காணப்பட்டுள்ளது. 

அண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது துப்பாக்கி மற்றும் இறுவட்டுக்கள் என்பன மீட்கப்பட்டன. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சி.டிகளிடையே  தொலைபேசி உரையாடல்களுக்கு மேலதிகமாக அவர் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நபர்களுடன் மேற்கொண்ட உரையாடல்களையும் பதிவுசெய்து வைத்துள்ளார். அதே வேளை விசேடமான நபர்களுடனான சந்திப்பு மற்றும் உரையாடல்கள் என்பவற்றை அவர் இரகசியமாக வீடியோ செய்து வைத்துள்ளதாகவும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. 

சி.ஜ.டியினால் முன்னெடுத்த முக்கிய மூன்று விசாரணைகள் தொடர்பான ஆவணங்களும் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்துள்ளதோடு இவை எவ்வாறு அவரின் கைகளுக்கு சென்றன என்பன தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாக அந்த அதிகாரி கூறினார். 

அவர் நீதிபதிகளுடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளதோடு அவை தொடர்பான குரல்பதிவுகளும் அவரிடம் இருந்துள்ளன.

முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை வழங்குவதற்கு முன்னர் நீதிபதியொருவருடன் அவர் மேற்கொண்ட உரையாடல் பதிவும் அவரிடம் இருந்துள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. 

ஐ.தே.க கொழும்பு மாவட்ட இளம் பெண் எம்.பி ஒருவருடன் அவர் கூடுதலாக உரையாடல்களில் ஈடுபட்டுள்ளதோடு அவருடன் கூடுதலாக பாலியல் விடயங்களே கதைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகளிடையே தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியங்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமாக அல்லது அரசியல் தேவைகளுக்காகவா எதிரணி அரசியல்வாதிகள் கடந்த ஆட்சியில் கைது செய்யப்பட்டார்கள் என சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறினார்.(பா)  

Tue, 01/07/2020 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை