இந்தியாவுடனான கிரிக்கெட் தொடர்: புதிய வீரரை களமிறக்கும் நியூசிலாந்து

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுடனான தொடருக்குப் பின்னர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது.

ஐந்து ரி 20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக அமைந்த இந்த சுற்றுப்பயணத்தில், முதற்கட்டமாக ஐந்து போட்டிகள் கொண்ட ரி 20 தொடர் இடம்பெறவுள்ளது. இந்த ரி 20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியுடன் மோதவிருக்கும் 14 பேர் அடங்கிய நியூசிலாந்து வீரர்கள் கடந்த (15) அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடும் சந்தர்ப்பத்தினை மூன்று வருடங்களுக்குப் பின்னர் ஹேமிஷ் பென்னட் பெற்றிருக்கின்றார். ரி 20 சர்வதேச போட்டிகளில் எதிலும் விளையாடாத வேகப் பந்துவீச்சாளரான ஹேமிஷ் பென்னட் உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து ரி 20 அணியில் உபாதைகள் காரணமாக அநேக வீரர்கள் வாய்ப்பினை இழந்திருக்கின்றனர். இந்த வீரர்களில் டொம் லேதம், மேட் ஹென்றி, லோக்கி பெர்குஸன் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் முக்கியமானவர்களாவர்.

முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சானது புதிதாக அணிக்குள் வந்திருக்கும் ஹேமிஷ் பென்னட் உடன் இணைந்து டிம் சௌத்தி, ஸ்கொட் குக்லிஜன் மற்றும் ப்ளையர் டிக்னர் ஆகியோர் மூலம் பலப்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளர்களாக மிச்செல் சான்ட்னர் மற்றும் இஸ் சோதி ஆகியோர் செயற்படவிருக்கின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து இடுப்பு உபாதை காரணமாக விலகிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான ரி 20 தொடரின் மூலம் மீண்டும் தனது பொறுப்பினை எடுத்துக் கொள்கின்றார். அதேவேளை, இந்தியாவுக்கு எதிரான ரி 20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் டொம் ப்ரூஸிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. டொம் ப்ரூஸ், கொலின் டி கிராண்ட்ஹோமேயின் இடத்தினை இந்தியாவுக்கு எதிரான இரண்டு ரி 20 போட்டிகளிலும் எடுத்துக் கொள்ளவிருக்கின்றார்.

இந்திய – நியூசிலாந்து அணிகள் மோதும் ரி 20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி ஓக்லான்ட் நகரில் ஆரம்பமாகின்றது.

நியூசிலாந்து அணி : கேன் வில்லியம்சன் (அணித் தலைவர்), ஹேமிஷ் பென்னட், மார்டின் கப்டில், ஸ்கொட் குக்லிஜன், டேரி மிச்செல், கொலின் மன்ரோ, மிச்செல் சான்ட்னர், டிம் செய்பார்ட், இஸ் சோதி, டிம் சௌத்தி, ரொஸ் டெய்லர், ப்ளையர் டிக்னர், டொம் ப்ரூஸ் (கடைசி இரண்டு போட்டிகளுக்கு மட்டும்), கொலின் டி கிரான்ட்ஹோம் (முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டும்).

Fri, 01/17/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக