பாதுகாப்பற்ற நிலையில் தொங்குபாலம்

பதுளை – பதுளுப்பிட்டியவில் அமைந்துள்ள தொங்குபாலம் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த தொங்குபாலம் உடைந்த நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் நாளாந்தம் உயிர் ஆபத்துக்கு மத்தியில் தமது பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இத்தொங்குபாலம் ஊடாக பதுளை நகருக்கும், பாலத்தைத் தாண்டி அமைந்துள்ள அந்தெனிய, ஹேகொட, மேமலை போன்ற பிரதேசங்களுக்கு சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என நூற்றுக்கணக்கானோர் பயணிக்கின்றனர். சிலர் விழுந்து காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இப்பாலத்தின் நடுவிலும் மற்றும் இரு கரையோரங்களிலும் உள்ள மரப் பலகைகள் உடைந்து வீழ்ந்து ஓட்டையாகவும், தூர்ந்தும் சீரழிந்து அவல நிலையில் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையிலுள்ள தொங்குபாலத்தினால் மழைக் காலங்களில் நிலைமைகள் இன்னும் மோசமாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இப்பாலம் குறித்து உடனடியாக உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பதுளை தினகரன் நிருபர்

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை