ரொஹிங்கிய இன அழிப்பை தடுப்பதற்கு ஐ.நா நீதிமன்றம் மியன்மாருக்கு உத்தரவு

ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர மியன்மார் அவசர நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.நாவின் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், மியன்மார் தனது இராணுவம் இன அழிப்பில் ஈடுபடுவதை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்றும் ரொஹிங்கியர்களுக்கு எதிரான கொலை மற்றும் கடுமையான தீங்குகளை தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ரொஹிங்கியர்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கான ஆதரங்களை பாதுகாத்தல் வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதோடு நான்கு மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் மியன்மாரை கேட்டுக்கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறுபான்மை ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக சுமார் 700,000 பேர் அண்டை நாடான பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றனர்.

இது தொடர்பில் மியன்மாருக்கு எதிராக உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் ஆபிரிக்க நாடான காம்பியா ஹேக் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதன் தீர்ப்பே நேற்று வெளியானது. இதனை அடுத்து ரொஹிங்கியர்களுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படும் பாகுபாட்டு செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்று காம்பியா கேட்டுக்கொண்டுள்ளது.

முஸ்லிம்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்த மேற்கு ரகினே மாநிலத்தில் இருந்து அவர்களை வெளியேற்றும் ஒருங்கிணைந்த கொலை, கற்பழிப்ப மற்றும் அழிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்களை காம்பியாவுக்கான வழங்கறிஞர்கள் கடந்த மாதம் நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.

இதில் மியன்மாரை காத்து அந்நாட்டின் அரசியல் தலைவியான ஆங் சான் சூக்கி சர்வதேச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

ரகினே மாநிலத்தில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுத்ததாக மியன்மார் தொடர்ந்து வாதிட்டு வந்தது.

Fri, 01/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை