ஜூனியர் பெண்கள் கொல்ப் சம்பியனாக தானியா மினெல் தெரிவு

பிரிமா சன்ரைஸ் பாண் உற்பத்தி நிறுவனத்தின் தொடர்ச்சியான 12 வருட அனுசரணையில் கொழும்பு றோயல் கொல்ப் கழக விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்களாக இடம்பெற்ற இலங்கை ஜூனியர் திறந்த கொல்ப் சம்பியன்ஷிப் போட்டிகள் சில பிரகாசிக்கும் வருங்கால நட்சத்திரங்களை இனங்காட்டி நிறைவடைந்துள்ளது. இந்த சுற்றுப்போட்டியின் பிரமாண்டமான பரிசளிப்பு வைபவத்திற்கு முன்னர் இலங்கை ஜூனியர் திறந்த கொல்ப் போட்டிகளின் பெருமைக்குரிய அனுசரணையாளரான பிரிமா சன்ரைஸ் பாண் உற்பத்தி நிறுவனம் அற்புதமான மதிய உணவினையும் ஏற்பாடு செய்திருந்தது.

90க்கும் மேற்பட்ட 9 வயதிலிருந்து 18 வயதுக்கு கீழ்ப்பட்ட ஜூனியர் கொல்ப் விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். நான்கு வயது பிரிவுகளில் இடம்பெற்ற இப்போட்டிகளில் நுவரெலியா கொல்ப் கழகம், வெலிசரை கடற்படை ஜூனியர் கொல்ப் அகடமி, கண்டி விக்டோரியா கொல்ப் அகடமி, அநுராதபுரம் ஜூனியர் கொல்ப் அகடமி, ஹம்பாந்தோட்டை சங்கரில்லா ஜூனியர் கொல்ப் கழகம் மற்றும் ஆர்.சீ.ஜீ.சி ஜூனியர் கொல்ப் கழகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியின் 15 -− 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தங்கப் பிரிவில் நடப்பு வருட சம்பியனான தானியா மினெல் மிகத் திறமையாக விளையாடி இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

தானியா மினெல் அண்மையில் நேபாளத்தில் நடைபெற்று முடிந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் கொல்ப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்திருந்தார். கைலா பெரேரா தங்கப் பிரிவின் பெண்கள் பிரிவின் ரன்னர் அப் ஆனதோடு தானியா மினெலின் சகோதரி ஷெரின் பாலரிய மூன்றாமிடத்தைப் பெற்றார்.

தங்கப் பிரிவின் ஆண்களுக்கான போட்டியில் நிரேக் தேஜ்வானி சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதோடு, யெனிக் குமார ரன்னர் அப் ஆனார். இதன் மூன்றாமிடத்தை லெவோன் நியெரேபொல பெற்றுக் கொண்டார்.

கே. தணுசன் 12 -− 14 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களுக்கான வெள்ளிப் பிரிவினை வெற்றி கொண்டார். இதன் ரன்னர் அப் ஸ்தானத்தை பெங்களுரைச் சேர்ந்த அபினவ் பாஸ்கர் பெற்றுக் கொண்டதோடு, மூன்றாமிடத்தை சணால் பினுஸ்க பெற்றுக் கொண்டார்.

10 -− 11 ப்ளஸ் வயதுப் பிரிவுக்கான வெண்கலப் பிரிவில் ரேஷான் அல்கம தனது இருப்பை மூன்று சுற்றுக்களிலும் தக்க வைத்துக் கொண்டதோடு, மிகவும் தைரியமாக விளையாடிய காயா தலுவத்தையை சோர்வடையாமல் பின்தொடர்ந்தார். இருப்பினும் ஆரம்ப தினம் முதல் இறுதி வரையில் மூன்று சுற்றுக்களிலும் முன்னிலை வகித்த ரேஷான், இறுதியில் காயாவை ஆறு வீச்சுக்களில் தோற்கடித்ததோடு, காயா ரன்னர் அப் ஆனார். மூன்றாமிடத்தை வோன் தேஜ்வானி பெற்றுக் கொண்டார்.

9 வயதுக்கு கீழான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான செப்பு பிரிவில் தேஜாஸ் ரதிஸ்காந்த் ஆரம்பம் முதல் இறுதி வரையில் செப்புப் பிரிவின் வெற்றியாளராகும் நோக்கில் முன்னிலை வகித்து ஏழு ஸ்ட்ரொக்கினால் கெய்யன் ஜோன் பிள்ளையை தோற்கடித்து வெற்றி பெற்றதோடு கெய்யன் ஜோன் பிள்ளை ரன்னர் அப் ஆனார். இப்பிரிவின் மூன்றாமிடத்தை செனால் நிம்சித் பெற்றுக் கொண்டார்.

பரிசளிப்பு நிகழ்வுக்கு முன்னதாக அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் இரண்டு வீராங்கனைகள் தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தயாரிக்கப்பட்ட சிறப்பு வீடியோ காட்சி படுத்தப்பட்டது. ஜூனியர் திறந்த பெண்கள் சம்பியனான தானியா மினெலும் பெண்கள் பதக்கம் வென்ற அணியில் அங்கத்தவராக இருந்தமை 12வது இலங்கை ஜூனியர் திறந்த கொல்ப் சம்பியன்ஷிப் போட்டியின் போது கூடியிருந்த அனைத்து இளம் ஜூனியர்களுக்கும் ஆர்வத்தை வழங்கியது.

“ஜூனியர் கொல்ப் ஆட்டத்தில் பிரகாசித்து விளங்குவதற்கான அடித்தாளத்தை இடுவதற்கும், 2021ம் ஆண்டில் சீனாவில் இடம்பெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வெற்றி கொள்வதற்கும் தானியா மினெல் சிறந்த உதாரணமாகும்” என இலங்கை ஜூனியர் கொல்ப் சங்கத்தின் தலைவர் திருமதி நிலூ ஜயதிலக கூறினார்.

பிரிமா சிலோன் நிறுவனம் கடந்த 12 வருடங்களாக ஜூனியர் கொல்ப் விளையாட்டின் முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் பங்களிப்பை வழங்கி வருவதையிட்டு பெருமையடைவதாக பிரதம அதிதியான பிரிமா சன்ரைஸ் பாண் உற்பத்தி நிறுவனத்தின் பொது முாகமையாளர் சுங் டைன் சிங் கூறினார்.

ஜூனியர் கொல்பின் வளர்ச்சிக்காக அயராத அர்ப்பணிப்புச் செய்தமைக்காக ஜூனியர் கொல்ப் தலைவர் திருமதி நிலூ ஜயதிலவுக்கு இலங்கை கொல்ப் யுனியனின் தலைவரான ஓய்வு பெற்ற எயார் சீப்மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் அனைத்து ஜூனியர்களையும் ஊக்குவித்ததோடு “உங்களை நீங்கள் நம்புங்கள், கடினமாக உழையுங்கள், உங்களுக்கு கிடைக்கும் வெற்றியை கற்பனை செய்யுங்கள். அது உங்கள் வாழ்வில் உங்களது கனவுகளை நிஜமாக்கிக் கொள்ள உதவும்” என்றும் ஊக்கப்படுத்தினார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் கொல்ப் கழக தலைவர் நிகழ்வில் உரையாற்றும் போது, அனைத்து வெற்றியாளர்களையும் வாழ்த்தியதோடு, ஏனைய அனைத்து பங்குபற்றுனர்களையும் சிரிப்பதற்கும், கடினமாக பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் அடுத்த வருடத்தில் பலத்துடன் கலந்து கொள்வதற்கும் ஊக்கப்படுத்தினார்.

முன்னாள் ஆர்.சீ.ஜீ.சீ கெப்டனும், இலங்கை கொல்ப் யூனியனின் கவுன்சில் உறுப்பினருமான அவன்கா ஹேரத், முன்னாள் இலங்கை கொல்ப் யூனியன் தலைவரும், கவுன்சில் உறுப்பினருமான பிரியத் பெர்னாண்டோ, இலங்கை கொல்ப் யூனியனின் செயலாளர் நிசான் நவரத்ன ஆகியோருடன் இணைந்து பிரதம அதிதியான பிரிமா சிலோன் லிமிடெட்டின் பொது முகாமையாளர் சுன் டைன் சிங் மற்றும் இலங்கை கொல்ப் யூனியனின் தலைவரான ஓய்வு பெற்ற எயார் சீப்மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோரும் விருதுகளை வழங்கினர்.

இதில் பங்கேற்ற அனைவருக்கும் பிரிமா சன்ரைஸ் பாண் நிறுவனத்தினால் பரிசுப் பொதிகளுடன் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. கலந்து கொண்டவர்களுக்காக சான்றிதழ்கள் ஆர்.சீ.ஜீ.சீ யின் மகளிர் தலைவி திருமதி ஸிராணி பபினினால் வழங்கி வைக்கப்பட்டன.

நலன் விரும்பிகளான திருமதி ஷியாமா பெரேரா, திருமதி உஷா டி சில்வா மற்றும் பவண் தேஜ்வானி ஆகியோரால் எதிர்காலத்தில் பிரகாசிக்க இருக்கும் நட்சத்திரங்களுக்கு 2019 ஜூனியர் திறந்த போட்டியின் போது சிறப்பு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அநுராதபுரம் ஜூனியர் அகடமியின் எச்.பி. அலோக்ஷன வீரசிங்க, என். ஈ.ஜீ. சி யின் எப். இம்ரான் மற்றும் கொழும்பு சணல் பிணுஸ்க ஆகியோர் விசேட பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.

புத்தளம் விசேட நிருபர்

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை