பாலர் பாடசாலைகளுக்கு விரைவில் தேசிய கொள்கைத் திட்டம் வகுப்பு

5 இலட்சத்து 80,000 சிறுவர்களின் எதிர்காலம்;

பாலர் பாடசாலைகளுக்கென தேசிய கொள்கைத் திட்டமொன்றை வகுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது பாலர் பாடசாலைகளுக்குச் செல்லும் 05 இலட்சத்து 80 ஆயிரம் சிறுவர்களின் வசதி மற்றும் எதிர்கால அபிவிருத்தி என்பவற்றை இலக்காகக் கொண்டே அரசாங்கம் இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தியிருப்பதாக அமைச்சரவை துணைப் பேச்சாளர் அமைச்சர்  டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இத்தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ் பாலர் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வித் தகைமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் கூடிய பாடதிட்டங்கள் என்பன கட்டாயப்படுத்தப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவையின் துணைப்பேச்சாளரான அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாலர் பாடசாலைகளுக்கு தேசிய கொள்கைத் திட்டமொன்றை வகுப்பதற்கு அனுமதி கோரி கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தாக்கல் செய்த பத்திரத்துக்கு நேற்றுமுன்தினம் (2) கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனினும் இத்தேசியக் கொள்கை திட்டத்தை வகுப்பது தொடர்பில் பரந்த மட்டத்தில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டுமென பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.

இதற்கமைய முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவும் தற்போதைய கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் தமது யோசனைகளை முன்வைத்துள்ளனர். மேலும் கல்விமான்கள் உள்ளிட்ட பலரின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டதன் பின்னர் இத்தேசியக் கொள்கைத் திட்டம் இறுதி வடிவம் பெறுமென்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

"பாலர் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் தம்மிடமுள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவர்களுக்கான சூழல் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். மாணவர்களின் ஆரம்ப பராயத்தை வளர்ப்பதற்கு பாலர் பாடசாலைகள் உயர் பங்களிப்பைச் செலுத்த முடியும். எனினும் அநேகமான பாலர் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் பெண்களும் அதற்குரிய தகைமை மற்றும் தொழில் ரீதியிலான திறமைகளை கொண்டிருப்பதில்லை.

இதுபோன்ற ஆசிரியர்களின் கல்விச் செயற்பாடுகள் மூன்று தொடக்கம் ஐந்து வயதுக்குட்பட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருத்தமற்றதென கல்வியமைச்சு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனால் புத்திஜீவிகள், அதிகாரிகள் மற்றும் இவ்விடயத்தில் ஆர்வம் கொண்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள், பரிந்துரைகளுக்கமைய வெகு விரைவில் தேசிய கொள்கை வடிவமைக்கப்படும்," என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

லக்ஷ்மி பரசுராமன்

 

Sat, 01/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை