இலங்கை அணி தடுமாற்றம்

சிம்பாப்வேயுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 293 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தடுமாற்றம் கண்டுள்ளது.

ஹராரேவில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதில் மத்திய வரிசையில் அஞ்சலோ மத்தியூஸ் மாத்திரம் அரைச்சதம் ஒன்றை பெற்றார். 158 பந்துகளுக்கு முதம்கொடுத்த அவர் 64 ஓட்டங்களை பெற்றார். இதன்போது அவர் 3 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை பெற்றார்.

மத்தியூஸ் 5 ஆவது விக்கெட்டுக்கு தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்து 84 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். தனஞ்சய டி சில்வா 42 ஓட்டங்களை பெற்றார்.

முன்னதாக இலங்கையின் ஆரம்ப வீரர்களான அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் ஓஷத பெர்னாண்டோ தலா 44 ஓட்டங்களை பெற்றனர்.

இதனால் இலங்கை அணி 119.5 ஓவர்களில் 293 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்போது சிம்பாப்வே அணியின் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் சிகந்தர் ராசா இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையை முழுமையாக ஆட்டம்காணச் செய்தார். 43 ஓவர்கள் பந்துவீசிய அவர் 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவரது சிறந்த பந்துவீச்சாக இது இருந்தது.

முன்னதாக சிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 406 ஓட்டங்களை பெற்றது. இதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வேயை விடவும் 113 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது.

போட்டியின் நான்காவது நாள் இன்றாகும்.

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை