குசல் பெரேரா அணியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்? திமுத் விளக்கம்!

இலங்கை-சிம்பாப்வே முதல் டெஸ்ட்:

சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக, இலங்கை கிரிக்கெட் அணி சிம்பாப்வே சென்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற விஷேட மதவழிப்பாட்டினை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணியினர் சிம்பாப்வேவிற்கு புறப்பட்டு சென்றனர்.இந்த நிலையில் இலங்கை அணி சிம்பாப்வேவிற்கு புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக கிரிக்கெட் சபையில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதில் அணியின் திட்டம் குறித்து அணித்தலைவர் திமுத் கருணாரத்ன கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் கூறிய கருத்துக்கள் இவை,

“இத்தொடர் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான ஒரு போட்டித் தொடராக இல்லாவிட்டாலும், எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான முன்னோட்ட தொடராக இருக்கும்.

இறுதியாக நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நாங்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. இந்த தொடரின் போது இழைத்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கான ஒரு தொடராக இத்தொடர் அமையும்.

சிம்பாப்வே சிறந்த அணி, உங்களுக்கு தெரியும் கடந்த 2017ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்காக விளையாடும் போது அவர்கள் சிறப்பான முறையில் விளையாடினார்கள். எனினும் நாங்கள் இறுதியில் அவர்களை வெற்றி கொண்டோம்.

சுரங்க லக்மால் அணியின் அனுபவ மிக்க பந்துவீச்சாளர். அவர் அணியில் உபாதைக் காரணமாக இடம்பெறாததை பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரின் போது உணர்ந்துக் கொண்டோம்.

இந்த தொடரில் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் பந்துவீசவில்லை. இதற்கு முன்னதாக நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சுரங்க லக்மால் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அவர் மீண்டும் அணியில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியான விடயம். புதுமுக பந்துவீச்சாளர்கள் இருவரை லக்மால் வழிநடத்துவார். அணியில் மிக வேகமாக துடுப்பெடுத்தாடக் கூடியவர் குசல் ஜனித் பெரேரா. அவர் சொந்த மண்ணில் இடம்பெற்றிருந்த நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்துவீச்சுக்கு தடுமாறியிருந்தார்.

இதனால் தான் குசல் பெரேராவிற்கு பதிலாக, அனுபவ வீரர் தினேஷ் சந்திமால் அணிக்கு உள்வாங்கப்பட்டார். எனினும், எதிர்வரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு குசல் ஜனித் பெரேராவிற்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல் அவரது கையில் சில காயங்களும் உள்ளன. ஆகையால் அவரை எதிர்வரும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டித் தொடர்களில் அவரை இழக்க முடியாது. இந்த சிம்பாப்வே டெஸ்ட் தொடரில், அவரது பங்களிப்பு பெரிதளவில் தேவையில்லை என உணருகின்றோம்.

அடுத்தமாதம் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாட இருக்கின்றோம். இத்தொடரில் அவரை இழக்க நாங்கள் விரும்பவில்லை. அவரது உடற்தகுதி எங்களுக்கு மிக முக்கியம், ஆகையால் தான் அவருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

சிம்பாப்வேவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.

இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 27ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. இரண்டு போட்டிகளுமே ஹராரே மைதானத்தில் நடைபெறுகின்றன.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தடைக்கு உள்ளாகிய சிம்பாப்வே கிரிக்கெட் அணி, குறித்த தடைக்குப் பின்னர் இலங்கை அணியுடன் விளையாடவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே அவர்களது முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக அமைகின்றது.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமே சிம்பாப்வே 2018ஆம் ஆண்டின் நவம்பரிற்குப் பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கின்றது.

இறுதியாக இலங்கை அணி ரங்கன ஹேரத் தலைமையில் சிம்பாப்வேவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொடரை 2- – 0 என வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் இதுவரையில் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 13 போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றுள்ளதுடன், சிம்பாப்வே அணி எந்தவொரு வெற்றியையும் பெறவில்லை.

Sat, 01/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை