நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டி: அவுஸ்திரேலிய அணி ஆதிக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான முன்னிலையை பெற்றுள்ளது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று ஆட்ட நேர முடிவின்போது அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்மூலம் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளும் கைவசம் இருக்க 243 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. டேவிட் வோர்னர் 23 ஓட்டங்களுடனும் ஜோ பேர்ன்ஸ் 16 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 454 ஓட்டங்களை பெற்றது. அபாரமாக ஆடிய மார்னுஸ் லபுஸ்சங் இரட்டைச் சதம் பெற்றார். 363 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 19 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 215 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 251 ஓட்டங்களையே பெற்றது. இதன்போது அபாரமாக பந்துவீசிய நெதன் லியோன் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவுஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 2–0 முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை