கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேசிய நடவடிக்கை குழு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேசிய நடவடிக்கை குழு-Committee Appointed to Prevent Corona Virus Spreading-Min of Health

இராணுவம், விமான நிலையம், மருத்துவ பிரிவுகளைச் சேர்ந்த 15 பேர் உள்ளடக்கம்

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்கும் வகையில் 15 பேர் கொண்ட தேசிய நடவடிக்கைக்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேசிய நடவடிக்கைக் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுப்பது தொடர்பில் மேற்கோள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகளை நடைமுறைப்படுத்த குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த குழுவில், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்கள்களான வைத்தியர் சுனில் டி அல்விஸ் மற்றும் லட்சுமி சோமதுங்க, வைத்தியர் நிஹால் ஜயதிலக, விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய, தேசிய மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன, விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, இலங்கை இராணுவத்தை பிரநிதித்துப்படுத்தி பிரிகேடியர் வைத்தியர் கிருஷாந்த பெனாண்டோ, தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர, வைத்தியர் பபா பலிஹவதன, மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் ஜயருவன் பண்டார, விமான நிலையத்தின் தலைவர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு நாளை (27) மாலை 5.00 மணிக்கு சுகாதார அமைச்சரின் தலைமையில், சுகாதார அமைச்சில் கூடி, சுகாதாரப் பிரிவினால் கொரோனா வைரஸ் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளது.

குறித்த குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான தொழில்நுட்ப திட்டத்தை தயாரிப்பதற்காக, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்கவின் தலைமையில் நாளை (27) காலை 11.00 மணிக்கு விசேட கலந்துரையாடலொன்றும், சுகாதார அமைச்சில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 01/26/2020 - 19:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை