ஐ.தே.கட்சியின் தலைமைத்துவ போராட்டம் முடிவுக்கு வருகிறது?

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவப் போராட்டத்தை எதிர்வரும் வியாழக்கிழமை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அதன் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தின் போதும், ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பின்போதும் கட்சிக்கான தலைமைத்துவம் குறித்தே பேசப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு மிகக் குறுகிய கால அவகாசமே உள்ள நிலையில் தலைமைத்துவ விவகாரத்துக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்சிக்கு புதிய தனித் தலைமையா அல்லது கூட்டுத் தலைமையா என்ற பிரச்சினைக்கு இக் கூட்டங்களில் இணக்கமான தீர்வை எட்ட முடியாத நிலை எற்பட்டுள்ளது.

தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க அணி கருஜயசூரிய, ரணில், சஜித் பிரேமதாஸ மூவரடங்கிய தலைமைத்துவக் குழுவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் சஜித் தரப்பு அணி சஜித் பிரேமதாஸவை கட்சித் தலைவராக ஏற்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இரதரப்புக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் அடுத்த வாரத்தில் கூடி இறுதி முடிவெடுக்கத் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அடுத்த வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் கூட்டத்தின் போது கூட்டத் தலைமையா? சஜித் தலைமையிலான தனித் தலைமையா என்பது தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பொன்றை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவிருப்பதாக ஐ.தே.கட்சி வட்டாரம் தெரிவித்தது.

அதேசமயம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவிருக்கும் கூட்டத்தில் உரிய இணக்கப்பாடு எட்டமுடியாத நிலை ஏற்படுமானால் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தல்வரை கட்சியின் இடைக்காலத் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயரை அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இவ்விதமிருக்க கட்சித் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாஸவுக்குப் பெற்றுக் கொடுக்கத் தவறினால் அடுத்த வாரத்தில் மாற்றுத் தீர்வொன்றுக்குச் செல்லும் நிலை ஏற்படலாமென சஜித் பிரேமதாஸ அணியினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலைப்பாட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்படவிருக்கும் பின்னடைவுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாதெனவும் அவ்வணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எம்.எ.எம். நிலாம்

 

 

Sat, 01/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை