சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி காலமானார்

சிரேஷ்ட அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் தனது 60ஆவது வயதில் (20) நேற்று முன்தினம் காலமானார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பெற்று விஞ்ஞானப் பாட ஆசிரியரான இவர், மொறட்டுவை அறபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகவும் , களுத்துறை ஜீலான் மத்திய கல்லூரி, தொட்டவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றில் அதிபராகவும் கட​ைமயாற்றினார். நாடுதழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து அதிபர்களில் இவரும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை வானொலியில் அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம், பாஹிமின் பரவசப் பயணம், அறிவுக் களஞ்சியம் போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக நேயர்களின் விருப்பத்துக்குரிய அறிவிப்பாளராக திகழ்ந்த ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, நாடு தழுவிய ரீதியில் பொது அறிவு, விஞ்ஞானம் சார்ந்த விடயங்களை போதிப்பவராகவும் இருந்து வந்தார். வானொலியின் சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் திகழ்ந்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். அரசியல், சமூகசேவையில் ஈடுபாடு கொண்ட இவர் பல அமைப்புக்களின் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் நீண்டகாலம் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி முன்வைப்பாளராகவும் கடமையாற்றிய அனுபவமுள்ள இவர், பத்திரிகைத் துறையிலும் தனது பங்களிப்பை வழங்கினார். அன்னாரது ஜனாஸா நேற்று (21) அதிகாலை மூன்று மணிமுதல் அவரதுபாணந்துறை,ஹேனமுல்லை இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8.30 மணியளவில் அன்னாரது சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நேற்று மாலை கல்முனை அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இரு ஆண் பிள்ளைகளின் தந்தையான அன்னார், மர்ஹூம் அப்துர் ரஹ்மான், சுபைதா உம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான ஜிப்ரி, ஆசிரியை ஆமினா உம்மாவின் கணவராவார்.

 

மொறட்டுவை தினகரன் நிருபர்

Wed, 01/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை