ம.ம முன்னணியின் அடையாளத்தை பாதுகாக்கவே தேர்தலில் போட்டி

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவது பாராளுமன்ற உறுப்புரிமையை பெறுவதை விட மலையக மக்கள் முன்னணியின் அடையாளத்தையும் அமரர் சந்திரசேகரனின் சேவைகளை தொடர்வதற்காகவுமே என சட்டத்தரணியும், மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவருமான அமரர் பெ. சந்திரசேகரனின் புதல்வியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இராதாகிருஷ்ணன் எம்.பியின் கருத்து எனக்கு எவ்வித ஆச்சர்யத்தையோ வருத்தத்தையோ தரவில்லை, ஏனெனில் கடந்த காலங்களாகவே கட்சியில் விரும்பினால் இருக்கலாம் இல்லாவிட்டால் போகலாம் என்ற நிலைமையே நீடித்து வருகின்றது. எனது ஆரம்பகால அரசியல் தொடக்கம் இந்நிலைமையே நீடித்து வருகின்றது. எனினும் இவற்றைப்பற்றி வெளிப்படையாக பேசினால் ஆதரவாளர்கள் அச்சமும் வருத்தமும் அடைவது ,மட்டுமல்லாது குழப்பங்களையும் போராட்டங்களையும் விளைவிக்கக் கூடும் என்பதாலேயே நான் இவ்வளவு காலமும் அமைதி காத்தேன்.

எனது தீர்மானம் தனி நபர் ஒருவரின் தீர்மானம் என்பது தவறான கருத்தாகும். மலையக மக்கள் முன்னணியின் பெரும்பாலான ஆதரவாளர்களினதும், இளைஞர்களினதும், பெண்களினதும், ஆரம்பகால உறுப்பினர்களினதும், மலையக புத்திஜீவிகளினதும் வேண்டுகோளுக்கு அமையவே இந்த தீர்மானத்தை மேற்கொள்ள நான் உந்தப்பட்டேன். மக்கள் என்னுடன் இருக்கும் வரை நான் தனி நபர் இல்லை என்பதையும் அவர்களின் குரலாய் என் குரல் ஒலிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மலையக மக்கள் முன்னணியின் இன்றைய நிலை ஏகாதிபத்தியத்தின் பாதையில் தடம்புரள்கிறது. இந்நிலைமை தொடர்ந்தால் இக்கட்சி எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த இலக்கு தவறிவிடும் என்பதே நிதர்சனமாகும் என்றார்.

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை