கிராம சேவகர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு

தனது  பதவி காலத்தினுள் கிராம சேவகர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என அரச நிர்வாக, உள் நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

மாத்தளை - பல்லேபொள பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கிராம சேவகர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு அறிவித்தார். கிராம சேவகர்கள்  எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருடன் இதன்போது கலந்துரையாடினர்.                          

கிராம சேவகர் பதவி என்பது கிராமத்தில் மிகவும் கெளரவமானது.  மாத்திரமன்றி பொது மக்களுக்கான ஓர் உன்னத சேவையுமாகும். எனவே கிராம சேவகர்களின் வேதனம் தொடர்பான சிக்கல்கள், மற்றும் அவர்களது சேவை விதி முறைகள் (யாப்பு) தொடர்பான பிரச்சினைகள் என்பவற்றிற்கு எனது பதவி காலத்தினுள் உரிய தீர்வினை நிச்சயமாக பெற்றுக் கொடுப்பேன்.    

இந் நாட்டில் கிராம சேவகர் பதவி ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்கள்  கடந்துள்ள நிலையில் தமக்கான சேவை விதி முறைகளோ, உரிய வேதனமோ கிடைக்கவில்லை எனவும், தமக்கான வேதனங்கள் உதவி முகாமையாளர்களுடைய சம்பளத்திற்கு சமாந்தரமாகவே அமைந்திருப்பதாகவும் கிராம சேவகர்கள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக் காட்டினர்.

கடந்த ஆட்சி காலத்தின் போது தமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பல்வேறு தொழிற் சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவற்றினால் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லையென கிராம சேவகர்கள் பலரும் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

தம்புள்ள தினகரன் நிருபர்.

Wed, 01/22/2020 - 11:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை