வடக்கு, கிழக்கு மக்களின் இன்றைய அவசியதேவை பொருளாதார ரீதியான அபிவிருத்தி திட்டங்களே

அரசியல் தீர்வு இரண்டாவது கட்டம்

வடக்கு, கிழக்கு மக்களை பொறுத்தவரையில் இன்று அம்மக்களுக்கு அவசிய தேவையாக உள்ளது பொருளாதார ரீதியான அபிவிருத்தி திட்டங்களே தவிர அரசியல் தீர்வல்ல. அரசியல் தீர்வானது அவர்களது இரண்டாம் கட்ட தேவையாகவே உள்ளது. வடக்கிற்கு விஜயம் செய்தபோது அந்த மக்களை பார்த்த பின்னர், அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் மிகத்தெளிவாக தெரிந்துகொண்ட விடயங்களாக இது காணப்படுகிறது என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நேற்றைய தினம் தெரிவித்தார்.

வடபகுதி மக்கள் பலர் உண்ணும் உணவிற்காகவும், குடிக்கின்ற தண்ணீருக்காகவும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர், அந்த மக்களுக்கு உடனடியாக அரசாங்கத்தின் மூலமாக நாங்கள் பொருளாதார ரீதியான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நேற்றுக்காலை அலரி மாளிகையில் ஊடகங்களின் பிரதானிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்த போதே அங்கு கலந்து கொண்டிருந்த அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

கடந்த நான்கரை வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் சார்ந்த வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் எவ்விதமான கரிசனையும் கொண்டிருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கொழும்பில் சொகுசான வீடுகளில் வசதியுடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான வீடு அல்லது காணி, சாப்பாடு போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை.

ஆனால் அங்குள்ள பாமர மக்களுக்கு அடிப்படை தேவையாக உண்ண உணவும் குடிக்க நீரும் வீட்டுப் பிரச்சினை எனப் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஓர் அரசியல் தீர்வு என்று கூறிக் கொண்டு காலத்தை கடத்தி மக்களை பட்டினி போடுகிறார்கள்.

 

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை