மலர்ந்த புத்தாண்டு தேர்தல்கள் நிறைந்த ஆண்டாகவே இருக்கும்

மக்களுக்கு வழங்கக் கூடிய சகல சலுகைகளையும் வழங்குவோம்

2020ஆம் ஆண்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆண்டாகவும் தேர்தல்கள் நிறைந்த ஆண்டாகவும் இருக்குமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்காலையில் வஜிரகிரிய விகாரையில் நேற்று(01) நடைபெற்ற புத்தாண்டு வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

2020ஆம் ஆண்டு எதிர்பார்ப்புகளை மனதில் வைத்துக்கொள்ளும் ஆண்டாகும். நாட்டை அபிவிருத்தி செய்யும் ஆண்டு. மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆண்டு என்பதுடன், தேர்தல்கள் நடைபெறும் ஆண்டுமாகும். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதிகள் இந்த ஆண்டில் நிறைவேற்றப்படும். ஆண்டின் ஆரம்பமே ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ள வருடமாக மாறியுள்ளது.

நாம் இன்னமும் பாராளுமன்றில் பெரும்பான்மையில்லாத அரசாங்கம். ஜனாதிபதி தெரிவாகிய பின்னர் அரசாங்கமொன்றை அவர் நிறுவியுள்ளதாக சிலர் நினைக்கின்றனர்.

என்றாலும், பாராளுமன்றில் எதிர்க்கட்சியினர் தான் பெரும்பான்மையாகவுள்ளனர். பொதுத் தேர்தலொன்றை நடத்தி அதில் வெற்றிபெற்ற பின்னர்தான் முழுமையான அரசாங்கமொன்றை அமைக்க முடியும்.

எவ்வாறெனினும், ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்குவோம். நாட்டின் அபிவிருத்தி குறித்தும் அதிகூடிய கவனம் செலுத்துவோம். வரி குறைக்கப்பட்டதால் அதிகளவானோர் நன்மையடைந்துள்ளனர் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை