தெரிவுக்குழு அமைத்து விசாரிக்க ஐ.தே.க கோரிக்ைக

ரஞ்சன் ராமநாயக்க விவகாரம்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் தொடர்பில் விசாரித்து ஆராய்வதற்கு தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் நேற்றுத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு இன்று (09) கூடும் போது இது தொடர்பில் கவனத்தில் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டார். ஐ. தே. க. தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்றுக் காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தெளிவுபடுத்தும் போதே, கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் விளக்கமளித்த அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரச தரப்பில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் கடந்த ஓரிரு தினங்களாக பரவலாக பேசப்படுகிறது. குற்றத்தடுப்புப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். அத்துடன் அவரிடமிருந்த சில ஒலி நடாக்களும் கைப்பற்றப் பட்டிருப்பதாக புலனாய்வுப்பிரிவு தெரிவிக்கின்றது. இது தொடர்பிலான விசாரணைகள் முடிவடைவதற்கு முன்னர் அவை எவ்வாறு இணையத் தளங்களுக்குக் கிடைத்தனதென்று தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில் இவ்விகாரத்தோடு எமது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சம்பந்தப் படுத்துவது பாரிய விடயமாகும்.எனவே இவ்விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவொன்றை நியமித்து விசாரிப்பதன் மூலம் உறுப்பினர்களது சிறப்புரிமையை பாதுகாக்க முடியும்.

குற்றம் இழைக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டால் அதனோடு தொடர்புடையவர்கள் எத்தரத்திலிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இன்று (நாளை) பாராளுமன்றதில் கூடும் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எம். ஏ. எம். நிலாம்

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை