தொழில் இழந்த ஆயிரக்கணக்கானோருக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்

கடந்த அரசாங்க காலத்தில் முறையாக நியமனம் வழங்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் வீதியில் தள்ளப்பட்டுள்ளதால், விரைவில் அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை மீண்டும் வழங்குவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகக் கூறியுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே நியமனம் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் பேரை வீதியில் தள்ளிவிட்டா புதிய நியமனங்களை வழங்கப் போகிறது? என்றும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இது வரையான காலப்பகுதியில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வாக்களித்த பெருமளவான மக்கள் அதிருப்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்களிடையே காணப்படும் கருத்தாடல்கள் மூலம் அதனை அறியக்கூடியதாகவுள்ளது. அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதை பின் தள்ளிவிட்டு எதிர்க்கட்சி எம்.பிக்களை வேட்டையாடியும், கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகள் பலவற்றை இரத்துச் செய்தும் மற்றும் அந்த வேலை வாய்ப்புகளுக்கு உள்வாங்கப்பட்டவர்களை வேலைகளில் இருந்து வெளியேற்றியும் அரசியல் பழிவாங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபத்திற்கு முறையாக இணைத்துக் கொள்ளப்பட்ட 167 பேர் தற்போது வேலையிலிருந்து

வெளியேற்றப்பட்டுள்ளனர். தேசிய கொள்கை, பொருளாதார நடவடிக்கைகள் , மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு , வடக்கு மாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சு மூலம் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்ட செயற்திட்ட உதவி பணியாளர்கள் 6800 பேருக்கும் அதிகமானோர் தற்போது வீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை சுகாதார உதவி ஊழியர்கள் 100 பேரும் வீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும் 1500ற்கும் மேற்பட்ட தொல்பொருள் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். 2500ற்கும் மேற்பட்ட வீடமைப்பு அதிகார சபை ஊழியர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்கு வரத்து சபையில் முறையாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்த 1500ற்கும் மேற்பட்டோரின் சகல பதவியுயர்வுகளும் இடைநிறுத்தப்பட்டு பழைய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் 1100 பேரின் பணிகள் 2020 மார்ச் முதல் இடைநிறுத்தப் படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சபையில் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை