அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

கிராண்ட்ஸ்லம் போட்டியான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 5-ம் நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதனிலை வீராங்கனை ஆஷ்லே பார்டி (அவுஸ்திரேலியா) - எலனா ரைபாகிளா (ரஷ்யா) மோதினர்.

இதில் ஆஷ்லே பார்டி 6--3, 6--2 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். தற்போதைய அவுஸ்திரேலிய பகிரங்கத்தில் ஆஷ்லே பார்டி முதல் நபராக 4-வது சுற்றுக்கு நுழைந்துள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் முதனிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- குயாங் வாங்க் (சீனா) பலப்பரீட்சை நடத்தினர். இதில் செரீனா முதல் செட்டை 4--6 என்ற கணக்கில் இழந்தார்.

2-வது செட்டிலும் 2--4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட செரீனா 7 (7)-6 -(2) என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றிக்கான 3-வது செட்டிலும் செரீனாவுக்கு குயாங் வாங்க் கடும் சவால் அளித்தார். இருவரும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். இந்த செட்டை குயாங் வாங்க் 7--5 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதனால் குயாங் வாங்க் (6-4, 6-2) -(7-7) (7--5) என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 24-வது கிராண்ட்சலம் பட்டத்தை குறிவைத்து இருந்த செரீனா வில்லியம்ஸ் 27-ம் நிலை வீராங்கனையான குயாங் வாங்க்கிடம் சரண் அடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனை கிவிட்டோவா (செக்குடியரசு) 6--1, 6--2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ரோவாவை (ரஷ்யா) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Sat, 01/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை