ஜப்பான் அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை இளையோர்

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை இளையோர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது

இலங்கை இளையோர் அணி தங்களுடைய முதல் இரண்டு குழுநிலை போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தோல்விகண்டு காலிறுதிக்கான வாய்ப்பை இழந்ததுடன், கேடயத்துக்கான போட்டிகளில் விளையாடி வருகிறது.

தங்களுடைய குழுநிலையின் கடைசிப் போட்டியில் கடந்த சனிக்கிழமை ஜப்பான் இளையோர் அணியை இலங்கை இளையோர் அணி எதிர்கொண்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஜப்பான் அணிக்கு வழங்கியது.

போட்டியின்் ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக அணிக்கு தலா 22 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி, களமிறங்கிய ஜப்பான் அணி தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்து 43 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ஜப்பான் அணியின் எந்தவொரு வீரரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை என்பதுடன், இலங்கை இளையோர் அணியின் பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க, டிலும் சுதீர, கவிந்து நதீஷன், அஷேன் டேனியல் மற்றும் நவோத் பரணவிதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 8.3 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை இளையோர் அணி சார்பில் ரவிந்து ரஸந்த மற்றும் மொஹமட் சமாஸ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 19 மற்றும் 7 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, நவோத் பரணவிதான 9 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை